![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
புகாருக்கு விளக்கம் கேட்ட தலைமை ஆசிரியை; கையைக் கடித்து சங்கிலியைப் பறித்த வேதியியல் ஆசிரியை- மாணவர்கள் அதிர்ச்சி!
தலைமை ஆசிரியர் மற்றும் வேதியியல் ஆசிரியர் ஆகிய இருவரும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சண்டையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![புகாருக்கு விளக்கம் கேட்ட தலைமை ஆசிரியை; கையைக் கடித்து சங்கிலியைப் பறித்த வேதியியல் ஆசிரியை- மாணவர்கள் அதிர்ச்சி! Nellai: The chemistry teacher bit the hand of the principal who asked for an explanation of the complaint and snatched the chain. புகாருக்கு விளக்கம் கேட்ட தலைமை ஆசிரியை; கையைக் கடித்து சங்கிலியைப் பறித்த வேதியியல் ஆசிரியை- மாணவர்கள் அதிர்ச்சி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/28/3d18abff61caa4c4731719dc281264541695881801261571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது தளபதி சமுத்திரம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டெல்லா ஜெயசெல்வி என்பவர் வேதியியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் அங்கு பயிலும் மாணவ மாணவிகளை மிகவும் அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டி வந்ததாக கூறப்படுகிறது.
தளபதிசமுத்திரம் கீழுர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரையும், மாணவி ஒருவரையும் ஆபாசமாக திட்டியதாகவும் புகார் எழுந்தது. மேலும் தான் திட்டியது குறித்து புகார் தெரிவித்தால் உங்களது பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாணவி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அம்மாணவியை அழைத்து கொண்டு பெற்றோர் இது குறித்து தலைமை ஆசிரியை ரெத்தின ஜெயந்தியிடம் புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து இது போன்று அடிக்கடி புகார் வருவதால் இதுகுறித்து தனக்கு விளக்கம் அளிக்கும்படி கடிதம் ஒன்றை ஸ்டெல்லா ஜெயசெல்வியிடம் தலைமை ஆசிரியர் கொடுத்துள்ளார். அப்போது கடிதத்தை கிழித்து எறிந்து ஆபாசமாக திட்டி தலைமை ஆசிரியரின் கன்னத்தில் அடித்து, கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்து தலைமை ஆசிரியரின் கையில் கடித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நாங்குநேரி போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி தலைமையாசிரியரின் தங்க சங்கிலியை தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர் தராமல் அடம் பிடித்தார். இதனால் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நாங்குநேரி டிஎஸ்பி ராஜ் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியையிடம் இருந்த தங்கச் சங்கிலியை மீட்டு தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசாரிடம் புகாரளிக்க தலைமை ஆசிரியர் முதலில் மறுத்த நிலையில் பின் புகாரளித்தார். தொடர்ந்து தன்னை தாக்கிய வேதியியல் ஆசிரியர் ஸ்டெல்லா ஜெயசெல்வி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க புகாரளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய ஏர்வாடி போலீசார், தளபதிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் ஆறு பிரிவுகளின் கீழ் (294b, 323, 324, 341, 353, 596/1) வேதியியல் ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பள்ளியில் மாலை வேளையில் தலைமை ஆசிரியர் மற்றும் வேதியியல் ஆசிரியர் ஆகிய இருவரும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சண்டையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)