3 ஆயிரம் ரூபாய் சம்பள பாக்கிக்காக மாடியில் இருந்து கீழே குதித்த நபர் - நெல்லையில் பரபரப்பு
தனது காண்ட்ராக்டர் காளி என்பவர் தனக்கு சம்பள பாக்கி 3000 ரூபாய் தர வேண்டும் எனவும் அதனை தந்தால் தான் கீழே வர முடியும் என மிரட்டல் விடுத்தார்.
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அருகே உள்ள வடுகர் பட்டியை சேர்ந்தவர் ரகுவரன். இவர் நெல்லை பெருமாள்புரத்தை அடுத்த அன்பு நகர் பகுதியில் வீடு கட்டும் தொழிலாளியாக பணி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் இவர் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடை எண் 6 இல் மாடியில் ஏறி நின்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் மேலப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் ஏராளமானோர் அங்கு நின்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க சொல்லி அறிவுறுத்தினர்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு தனது காண்ட்ராக்டர் காளி என்பவர் தனக்கு சம்பள பாக்கி 3000 ரூபாய் தர வேண்டும் எனவும் அதனை தந்தால் தான் கீழே வர முடியும் என மிரட்டல் விடுத்துக் கொண்டே இருந்தார்.. காவல்துறையினர் மாடிக்கு சென்று அவரை மீட்க நினைக்கும் போது அவர் அங்கிருந்து கீழே குதித்தார். அப்போது தீயணைப்பு துறையினர் கீழே துணியை விரித்து அவரை மீட்க தயாராக இருந்த நிலையில் அவர் கீழே குதித்தார். அப்போது தீயணைப்பு துறையினர் அவரை கீழே விரித்து வைத்திருந்த துணியின் மூலம் மீட்டனர். இதில் அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் அவரை புறக்காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.. இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்