நெல்லை : தொடங்கவிருக்கும் நவராத்திரி திருவிழா.... களைகட்டும் கொலு பொம்மைகள் விற்பனை...!
”இந்த ஆண்டு வருகிற 26ந் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. இதனால் மக்கள் ஆர்வமுடன் வீடுகளில் கொலு வைப்பதற்காக பொம்மைகளை வாங்க தொடங்கி உள்ளனர்”
மலை மகள், அலை மகள், கலை மகள் ஒரு ரூபமாக இணைந்து மகிசாசூரனை வதைத்ததை தான் நவராத்திரி விழாவாக கொண்டாடுகின்றோம். மனிதன் படிப்படியாக தன் ஆன்மீக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகிறது. இம்முறைப்படி கொலு வைத்து முப்பெரும் தேவியரை வணங்கினால் கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றும் செழித்தோங்கம் என்பது நம்பிக்கை. மேலும் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில்கள் மற்றும் வீடுகளிலும் கொலு வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம். இந்த கொலுவில் பல்வேறு விதமான கடவுள் பொம்மைகள் வைத்து பூஜைகள் நடத்தி வழிபடுவார்கள். அதன்படி இந்தாண்டு நவராத்திரி விழா தொடங்கவிருப்பதை முன்னிட்டு அனைத்து இடங்களிலும், கொலு பொம்மைகள் விற்பனையானது கலைகட்டத் துவங்கியுள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு வருகிற 26ந் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. இதனால் மக்கள் ஆர்வமுடன் வீடுகளில் கொலு வைப்பதற்காக பொம்மைகளை வாங்க தொடங்கி உள்ளனர். இதனால் நெல்லை டவுணில் விற்பனைக்காக ஏராளமான கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு பல்வேறு வகையான, விதவிதமான பொம்மைகள் விற்பனைக்கு வந்து உள்ளன. இங்கு ரூ.5 முதல் ரூ.10 ஆயிரம் வரை கொலு பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது. கொலு செட் பொம்மைகள் ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த செட் பொம்மைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து பொம்மை விற்பனையாளர் கிருஷ்ணன் கூறும் போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலத்தில் கொலு பொம்மைகள் விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால் இந்தாண்டு பொம்மை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு பல புதிய வகையான பொம்மைகள் விற்பனைக்காக வந்து உள்ளன. மீனாட்சி சுந்தரேசுவரர், சக்கரத்தாழ்வார், தட்சிணா மூர்த்தி, அன்னபூரணி, சிவன் குடும்பம், வராகி அம்மன், கற்பக விநாயகர், ராஜகணபதி உள்ளிட்ட பல்வேறு கடவுள் சிலைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. புதுவரவாக இந்தாண்டு நிறைய பொம்மைகள் வந்துள்ளது. மேலும் வளைகாப்பு, மீனாட்சி திருக்கல்யாணம், சீனிவாசர் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், சரவண பொய்கை, சிவபெருமான் புட்டுக்கு மண்சுமந்த கதையை விளக்கும் பொம்மை செட், விவசாயத்தை பிரதிபலிக்கும் பொம்மை செட்டுகள் இந்த ஆண்டு விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனை மக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். இந்த சிலைகள் களிமண் மற்றும் காகித கூழ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டு உள்ளன என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்