பொன்விழா கொண்டாடும் நெல்லை ஈரடுக்கு மேம்பாலம்.. கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
இந்த பாலம் கட்டப்பட்டு 1973 நவம்பர் 13 ல் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது.
திருநெல்வேலி என்றால் வரலாற்று சிறப்புமிக்க பல விஷயங்களை அடுக்கி கொண்டே செல்லலாம். அதில் இன்றளவும் மக்கள் பயன்பாட்டுக்குரிய விஷயங்களில் ஒன்று மாநகர பகுதியில் உள்ள ஈரடுக்கு மேம்பாலம். 1973 ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த மேம்பாலம். ரயில் செல்லும் இருப்பு பாதையின் மீது இரண்டு அடுக்குகள் கொண்டதாய் கட்டபட்டுள்ளது. திருக்குறளின் இருவரி போல் அமைந்ததால் இதற்கு திருவள்ளுவர் மேம்பாலம் என்று கருணாநிதி பெயரிட்டார். குறிப்பாக திருநெல்வேலியையும் - பாளையங்கோட்டையையும் இணைக்கும் சுலோக்ஷ்ணா முதலியார் ஆற்று பாலம் போல், திருநெல்வேலி சந்திப்பையும், மாநகர பகுதியையும் இணைக்கும் மிக முக்கிய தொடர்பு கொண்டது ஈரடுக்கு மேம்பாலம். ரூ.47 லட்சம் செலவில் 800 மீட்டர் நீளத்தில் 30.30 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் 26 தூண்கள் மேல் நிறுவப்பட்ட சிமிண்ட் சிலாப்புகளால் ஆனது. ஒவ்வொரு சிமெண்ட் சிலாப்பும் 31 மீ நீளமும், 600 டன் எடையும் கொண்டது. கட்டி முடித்து 27 ஆண்டுகள் கழித்து கடந்த 2000 வது ஆண்டில் ரூ.1 கோடியே 45 லட்சம் செலவில் பாலம் சீரமைக்கபட்டது.
இந்த பாலம் கட்டப்பட்டு 1973 நவம்பர் 13 ல் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. இந்த மேம்பாலம் ஆசியாவிலேயே ரெயில் பாதையின் குறுக்கே அமைக்கப்பட்ட முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்ற பெருமைக்குரிய சிறப்பை பெற்று விளங்குகிறது. நெல்லை மாநகர மக்களின் வாழ்வில் இந்த பாலம் ஒன்றி கலந்துள்ளது. இந்த பாலத்தின் மேல் பகுதியில் கனரக வாகனமும், கீழ் பகுதியில் இலகுரக வாகனமுக் செல்லும் வகையில் அமைந்துள்ளது. 50 ஆண்டுகள் கடந்த இந்த பாலம் 2 முறை புனரைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 50 ஆண்டுகள் கடந்த இந்த பாலத்தின் பொன்விழாவை கொண்டும் வகையில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையொட்டி நெல்லை சந்திப்பு பகுதியில் பாலத்தில் அமைந்துள்ள அடிக்கலில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்ததுடன் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.