கடும் நிதி நெருக்கடியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., இது நீடித்தால்... - துணைவேந்தர் சந்திரசேகர்
ஆண்டுக்கு 60 கோடி விதம் அரசு பல்கலைக்கழகத்திற்கு பணம் தர வேண்டி உள்ளது. கணக்குத் தணிக்கை என்ற பிரச்சினையை காரணம் காட்டி அந்தத் தொகையையும் 2016 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைத்துள்ளனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா வரும் பிப்ரவரி 3ஆம் தேதி ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திர சேகர் பட்டமளிப்பு நிகழ்ச்சி ஆளுநர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினாக்ஷ் வியாஸ், உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த பட்டமளிப்பு விழா மூலம் 40 ஆயிரத்து 622 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். தமிழக ஆளுநரிடம் நேரடியாக தங்கப்பதக்கம் பெற்ற 108 மாணவர்களும் ஆராய்ச்சி படிப்பில் பட்டம் வென்ற 351 மாணவர்கள் என 459 பேர் பட்டத்தை பெறுகின்றனர் என தெரிவித்தார். பல்கலைக்கழக மானிய குழு விதித்துள்ள புதிய வழிமுறைகள் படி ஆராய்ச்சி படிப்புக்கான புதிய வழிமுறைகள் ஜனவரி 2024 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீட்டு முறைப்படி ஆராய்ச்சி மாணவர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும். பல்கலைக்கழக இணையதளத்தில் படிப்புக்கு தேவையான அனைத்தும் நேரடியாக வெளியிடப்படும். கல்லூரி முதல்வர்கள் தான் இனி ஆராய்ச்சி பாடப்பிரிவகளுக்கான தலைவர்களாக செயல்படுவார்கள். ஆராய்ச்சி மாணவர்கள் சேர்க்கை இனி மதிப்பெண் அடிப்படையிலும் காலியிடங்களின் அடிப்படையிலும் புதிய வழிமுறைகள் படி செய்யப்படும். ஆராய்ச்சி மாணவர்கள் கலந்தாய்விற்கு வரும்போது முன்னுரிமைகளை தேர்வு செய்து கொள்ளும் வகையில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் தேர்வு செய்வதில் குளறுபடிகள் செய்யும் வழிகாட்டுனர்கள் மீது பல்கலைக்கழகம் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அந்த வழிகாட்டுநர்கள் செயல்படும். கல்லூரி மீதும் கடுமையான நடவடிக்கையை பல்கலைக்கழகம் எடுக்கும் என பல்கலைக்கழக துணைவேந்தர் எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. ஆண்டுக்கு 47 கோடி ரூபாய் பற்றாக்குறை நிதி இருந்து வருகிறது பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும் முடியாத நிலை தற்போது எழுந்து வருகிறது.
இதே நிலை நீடித்தால் பல்கலைக்கழகம் ஆறு மாதத்தில் மிக மோசமான நிலையை சந்திக்கும். பல்கலைக்கழகத்தில் ஊதியம் உள்ளிட்டவர்களுக்காக பல்கலைக்கழக வருங்கால வைப்பு நிதியை எடுத்து செலவு செய்யும் நிலை தற்போது இருந்து வருகிறது. இந்த மாத ஊதியம் வழங்குவதற்கு ரூபாய் இரண்டரை கோடி தேவைப்படுகிறது. தமிழக அரசிடம் பல்கலைக்கழக நிர்வாக குழு மூலம் நிதி கோரியுள்ள நிலையில் அதுவும் கிடைக்கப்பெறவில்லை. மத்திய அரசால் வழங்கக்கூடிய நிதியும் தடைபட்டுள்ளது. சி.எஸ்.ஆர் நிதிகளும் கிடைக்கப் பெறாமல் மிகுந்த மோசமான நிலையை சந்தித்து வருகிறோம். பல்கலைக்கழகத்தில் உள்ள நிதி அனைத்தும் போக்குவரத்து துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 60 கோடி விதம் அரசு பல்கலைக்கழகத்திற்கு பணம் தர வேண்டி உள்ளது. கணக்குத் தணிக்கை என்ற பிரச்சினையை காரணம் காட்டி அந்தத் தொகையையும் 2016 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைத்துள்ளனர் என தெரிவித்தார்