பல் பிடுங்கிய விவகாரம்: வழக்கறிஞர் ஹென்றி தீபன் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அதிரடி ஆய்வு
குறிப்பாக பல் புடுங்கிய சம்பவம் நடைபெற்ற அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வெறும் மூன்று சிசிடிவி கேமராக்கள் மட்டுமே இருப்பதாக தகவல் அறிய உரிமை சட்டத்தில் தகவல் கிடைத்துள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரக உதவி கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை கொடூரமாக புடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகாரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா உயர்மட்ட விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கனவே இந்த விவகாரத்தில் சார் ஆட்சியர் விசாரணை நடத்திய நிலையில் தமிழக அரசு கூடுதலாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதா கடந்த வாரம் திங்கள்கிழமை முதல் கட்ட விசாரணையை தொடங்கினார். அன்று பாதிக்கப்பட்ட ஒருவர் கூட ஆஜராகாத நிலையில் நேற்று தனது இரண்டாம் கட்ட விசாரணையை அதிகாரி அமுதா தொடங்கினார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த விசாரணையில் நேற்று ஏஎஸ்பி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்ட 13 பேர் தங்கள் வழக்கறிஞர்களுடன் விசாரணைக்கு ஆஜராகினர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட அருண்குமார், கணேசன் மற்றும் இரண்டு சிறார்கள் தரப்பில் மக்கள் கண்காணிப்பக இயக்கத்தின் நிறுவனரும் வழக்கறிஞருமான ஹென்றி தீபன் விசாரணையில் பங்கேற்றார். விசாரணைக்கு பிறகு வெளியே வந்த ஹென்றி தீபன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தனது கடமையை தவறிவிட்டதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி நெல்லை மாவட்ட காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முறையாக பொருத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தார். குறிப்பாக பல் புடுங்கிய சம்பவம் நடைபெற்ற அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வெறும் மூன்று சிசிடிவி கேமராக்கள் மட்டுமே இருப்பதாக தகவல் அறிய உரிமை சட்டத்தில் தகவல் கிடைத்துள்ளது. எனவே அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நான் நேரடியாக ஆய்வு செய்ய இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வழக்கறிஞர் ஹென்றி தீபன் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் தனது உதவியாளர்களுடன் நேரடியாக ஆய்வுக்கு சென்றார். அப்போது அவர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் அறை, வரவேற்பு அறை, கைதிகள் அடைக்கப்படும் அறை, கழிவறை என ஒவ்வொரு இடமாக ஆய்வு செய்தார் வழக்கறிஞரின் இந்த திடீர் ஆய்வால் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளை காவல் நிலையத்தில் அலுவல் பணிகள் சாராத இடத்தில் வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. எனவே காவல் நிலையத்தில் காவலர்கள் உணவு அருந்தும் பகுதி உட்பட அனைத்து இடங்களையும் வழக்குறிஞர் ஹென்றி தீபன் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் அளித்தார். தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தில் சிசிடிவி கேமராக்கள் தொடர்பான விசாரணை வர இருப்பதால் வழக்கறிஞர் அம்பாசமுத்திரத்தில் ஆய்வு செய்ய விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பார் என கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று இரவு 12 மணி வரை அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் உயர்மட்ட விசாரண அதிகாரி அமுதா தனது விசாரணையை நடத்தினார். காலை 10 மணிக்கு தொடங்கி விசாரணை சுமார் 14 மணி நேரம் வரை நடைபெற்றது. ஆனால் 12 மணி வரை மொத்தம் வந்த 13 பேரில் 10 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க முடிந்தது. எனவே மீதமுள்ள மூன்று பேரிடம் இன்று அவர் விசாரணை மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்