சபாநாயகர் ஊருக்கு குமரியில் இருந்து தண்ணீரா..? - எதிர்க்கும் அமைச்சர்
தோவாளை கால்வாய் மடைகளை அடைத்து அரசாணை மீறி ராதாபுரம் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதை தடுத்து குமரி மாவட்ட விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாய் பாசனத்துக்கு குமரி அணைகளில் இருந்து அரசாணை மீறி தொடர்ச்சியாக தண்ணீர் வழங்கப்படுவதால் தோவாளை, தெங்கம் புதூர் பகுதியில் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக குமரி பாசனத்துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசன திட்ட அணையில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாய் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து தேவைக்கேற்ப நீர் திறந்து விட அரசு உத்தரவிட்டு இருந்தது.அதனைத் தொடர்ந்து தோவாளை கால்வாய்-திருமூலர் கால்வாயில் இருந்து ராதாபுரம் கால்வாயில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார், இதன் மூலம் 52 குளங்கள் தண்ணீர் நிரம்பி 15987 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் வினாடிக்கு 150 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் சுமார் நேரடியாக 15987 ஏக்கரும் 52 குளங்கள் மூலம் மறைமுகமாக 1013 ஏக்கரும் பாசன வசதி பெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது கோதையாறு அணையில் இருந்து தற்போதும் ராதாபுரம் பாசன விவசாய பகுதிக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு குமரி மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்டம் கோதையாறு பாசன திட்டத்திற்குட்பட்ட குமரி பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், கோதையாறு பாசறை திட்ட நீர்நிலைகள் மூலம் சுமார் 85 ஆயிரம் நிலங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் கால்வாய் பாசனத்தில் உள்ள சுமார் 15,000 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக கடந்த காலங்களில் ஆண்டுக்கு ஜூன் 20 முதல் 25 நாட்கள் ஜூன் ஜூலை மாதங்கள் பாசன நீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட சுமார் மூன்றரை மாதம் அதாவது அக்டோபர் 30ஆம் தேதி வரை தண்ணீர் வழங்கும் விதமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லை என்பதால் அப்போதே குமரி மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அக்டோபர் மாதத்தை கடந்து தற்போது வரையிலும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தோவாளை கால்வாய் பாசன மடைகளை அடைத்து இங்குள்ள விவசாயத்துக்கு தண்ணீர் வழங்காமல் அரசாணை மீறி பொதுப்பணித்துறை நீராதார அதிகாரிகள் ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் வழங்கி வருகின்றனர்.
இதனால் தோவாளை தெங்கம் புதூர், பறக்கை பகுதி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் நெற் பயிர்கள் கருகி வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் பேரிழப்பு சந்தித்து வருகின்றனர். குமரி மாவட்ட விவசாயிகள் ராதாபுரம் கால்வாய் பாசன விவசாயத்திற்கு எதிரானவர்கள் அல்ல. தற்போது கடும் வெயில் அடித்து வரும் நிலையில் ராதாபுரம் கால்வாய் கடைமடை வரை தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. இதுபோல் தோவாளை சுற்றுப்பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் இருதரப்பு விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தோவாளை கால்வாய் மடைகளை அடைத்து அரசாணை மீறி ராதாபுரம் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதை தடுத்து குமரி மாவட்ட விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.