(Source: ECI/ABP News/ABP Majha)
முதல்வர் ஸ்டாலின் தன் கீழுள்ள போலீஸ் துறையை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது - ஹெச்.ராஜா
தமிழகம், கேரள முதல்வர்கள் அரசியலமைப்பு சட்ட அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சட்ட அறிவு இல்லாதவர்கள் முதல்வராக வந்திருப்பது நமது துரதிஷ்டம் - ஹெச்.ராஜா
முதல்வர் ஸ்டாலின் தன் கீழுள்ள போலீஸ் துறையை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாஜ மூத்த தலைவர் ஹெச். ராஜா தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலில் மூலவர், சண்முகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை, பெருமாள், சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுவரை நான்கு கட்டஙகளாக 380 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக தேவையான பெரும்பான்மை கிடைத்து விட்டது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இனிவரும் தொகுதிகள் போனஸ். நாட்டு மக்களின் மன நிலையும் அது தான். வயநாட்டில் தேர்தல் முடிந்த பிறகு ராகுல்காந்தி தோற்றுப்போவது தெரிந்து தான் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கனவே பல கருத்துக்கணிப்புகள் உபியில் பாஜகவுக்கு 77 இடங்கள் நிச்சயமாக கிடைக்கும் என கூறியுள்ளது.
திமுக என்பது ஒரு குடும்பத்திற்கு சேவை செய்யும் கட்சியாக உள்ளது. யூடியுபர் சவுக்கு சங்கர் யாரும் நேர்மையானவர்கள் இல்லை, யாரையும் மரியாதைக்குறைவாக பேசுவதே அவரது குணம். அவரை கைது செய்ததில் ஆட்சேபனை இல்லை. ஆனால் கைது செய்த பிறகு கையை உடைத்துள்ளது நீதிமன்றத்தில் நிருபணமாகி உள்ளது. இது போலீசாரின் மோசமான நடவடிக்கை. இதேபோல பேசிய திமுக அமைச்சர்கள் அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. நடிகை ராதிகா குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிகவும் கேவலமாக பேசியுள்ளார்.
திமுக பாசிச சக்தி. திமுகவின் அடையாளமே அதான். முதல்வர் ஸ்டாலின் தன் கீழுள்ள போலீஸ் துறையை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அவர்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருள் தடுப்பதற்காக போலீசுக்கு பயிற்சி கொடுக்கப்போவதாக சொல்லியிருக்கிறார். உங்கள் வீட்டில் இருந்தவர்தானே ஜாபர் சாதிக். அவர் போதைப்பொருள் விற்ற ரூ.2000 கோடி பணத்தில் தான் சினிமாவுக்கு நிதியுதவி செய்துள்ளார். தமிழகத்தில் காட்டு தர்பார் நடந்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும் தவறு நடந்து கொண்டிருக்கிறது. அரசு போக்குவரத்து கழகத்துக்கு உள்ள 300 டிப்போ ரூ.3 ஆயிரம் கோடிக்கு அடமானத்தில் உள்ளது. அந்த அளவிற்கு தமிழகத்தின் நிதிநிலை மிக மோசமாக உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சிஏஏ என்பது மத ரீதியான துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப்படுவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டமாகும். பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாட்டிலிருந்து வந்த இந்துக்கள் சீக்கியர்கள் பெளத்த மதம் உள்ளிட்ட வேறு மதத்தினர் விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டுமென சொல்லி இருக்கிறோம் யாருக்காவது குடியுரிமையை எடுக்க வேண்டும் என கூறவில்லை. ஆன்லைன் மூலமாக குடியுரிமை கேட்டால் மத்திய அரசு அவர்களுக்கு ஆன்லைன் மூலமே குடியுரிமை வழங்கும். இதில் மாநில அரசு தலையிட முடியாது. தமிழகம், கேரளா முதல்வர்கள் அரசியலமைப்பு சட்ட அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சட்ட அறிவு இல்லாதவர்கள் முதல்வராக வந்திருப்பது நமது துரதிஷ்டம். இவ்வாறு அவர் பேசினார்