Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: சிட்னி டெஸ்ட் போட்டியுடன் விடைபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா, ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சிட்னி டெஸ்ட்டில் ஆடவில்லை.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இந்த போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த தொடரில் முதல் போட்டி தவிர மற்ற போட்டிகளில் இந்திய அணியின் செயல்பாடு மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது.
ரோகித் சர்மா ஓய்வு?
பும்ரா தவிர மூத்த வீரர்களின் செயல்பாடானது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. குறிப்பாக, சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஃபார்ம் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பும்ரா தலைமையில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்து ரோகித் தலைமையில் 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது.
இதனால், ரோகித் சர்மா கேப்டன்சியை பும்ராவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற வேண்டும் என்றும் கோஷங்கள் எழுந்தது. இதனால், சிட்னி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என்று தகவல்கள் வெளியாகியது.
பெஞ்சில் ஹிட்மேன்:
இந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக சிட்னி டெஸ்ட் போட்டியிலே ரோகித் சர்மா ஆடவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ் போடுவதற்காக ரோகித் சர்மாவிற்கு பதில் பும்ரா மைதானத்திற்கு வந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக, பும்ரா கூறும்போது, இந்த போட்டியில் ஓய்வு எடுத்ததன் மூலம் எங்கள் கேப்டன் ரோகித் சர்மா தலைமைத்துவத்தை காட்டியுள்ளார். இது அணியின் ஒற்றுமையை காட்டுகிறது. அணிக்கு எது சிறந்ததோ? அதையே தேர்வு செய்துள்ளோம். இதில் எந்த சுயநலமும் இல்லை என்று கூறினார்.
மேலும், பிசிசிஐ சார்பிலும் ரோகித் சர்மாவை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியதாகவும், அதன் காரணமாகவே அவர் சிட்னி டெஸ்ட்டில் ஆடவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 31 ரன்கள் மட்டுமே ரோகித் எடுத்துள்ளார். அவரது சராசி 6.29 ஆகும்.
அவுட் ஆஃப் பார்ம்
ரோகித் சர்மா இதன்பின்பு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தனது முழு கவனத்தையும் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 37 வயதான ரோகித் சர்மா இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 302 ரன்கள் எடுத்துள்ளார். 12 சதங்கள், 1 இரட்டை சதம், 18 அரைசதம் விளாசியுள்ளார். அவரது பேட்டிங் சராசரி 40.58 ஆகும்.
2013ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2007ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வரும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 11 ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஆடி வருகிறார். கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு ரோகித் சரமா தலைமையில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தவிர எந்த தொடரையும் வெல்லவில்லை.
ரோகித் சர்மா அதிகாரப்பூர்வமாக டெஸ்ட் போட்டிகளில் விடைபெறாவிட்டாலும், மெல்போர்ன் டெஸ்ட் போட்டியே அவரது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிட்னி போட்டியின் முடிவிற்கு பிறகு ரோகித் சர்மா தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆடாமல் பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி ஜெய்ஸ்வால், ராகுல், கில் விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.