(Source: ECI/ABP News/ABP Majha)
அரசியலில் தாங்களும் இருக்கிறோம் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் - முதல்வர் ஸ்டாலின்
தென்காசிக்கு வந்தவுடன் மக்கள் அளித்த மனுக்கள் மற்றும் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றும் வகையிலான திட்டங்களை மேடையிலேயே அறிவித்தார்.
தென்காசி மாவட்டம் கணக்கப்பிள்ளைவலசையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 508 பயனாளிகளுக்கு 182.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் இன்று வழங்கினார். இதில் 22.20 கோடி மதிப்பிலான 57 முடிவடைந்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தொடர்ந்து 34.14 கோடி மதிப்பில் 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து அவர் விழா மேடையில் பேசும் பொழுது, "தென்காசிக்கு வந்ததும் இந்த மண்ணை போன்றே மனதும் குளிர்ச்சி அடைகிறது. எழில் கொஞ்சும் மாவட்டமாகவும், வீரத்தின் விளைநிலமாக இருக்கக்கூடிய மண் இந்த மாவட்டம். ஒண்டி வீரனுக்கு மணி மண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தவர் கலைஞர். இயற்கை, வேளாண்மை, ஆன்மீகம், வீரத்திற்கு புகழ் பெற்றது தென்காசி மாவட்டம். அரசு விழாவா அல்லது கட்சியின் மாநில மாநாடா என சந்தேகம் எழும் அளவிற்கு உள்ளது இந்த நிகழ்ச்சி" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தென்காசி மாவட்டத்தில் மட்டும் பயனடைந்தவர்கள் எண்ணிக்கையை சொல்கிறேன். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 11 ஆயிரத்து 494 மனுக்கள் பெறப்பட்டு 11,490 மனுக்கள் தீர்வு காணப்பட்டு உள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 41,980 மாணவ, மாணவியர் பயனடைந்துள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 27 கோடியே 77 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. மகளிர்க்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் கீழ் 80 லட்சம் முறை கட்டணம் இல்லாமல் பேருந்து பயணத்தில் பயனடைந்து உள்ளனர். 2935 திருநங்கைகள் பயனடைந்து உள்ளனர். 50,361 மாற்று திறனாளிகள் பயனடைந்து உள்ளனர். 73,491 பயனாளிகளுக்கு 436 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.. உழவர்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 13 கோடி ரூபாய் செலவில் 1823 பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிதாக ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளது. 1,701 குடும்பங்களுக்கு வேளாண் கருவி தொகுப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. சங்கரன்கோவிலில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் 2 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது" என தெரிவித்தார்.
மேலும், "தென்காசிக்கு வந்தவுடன் மக்கள் அளித்த மனுக்கள் மற்றும் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றும் வகையிலான திட்டங்களை மேடையிலேயே அறிவித்தார். அதன்படி தென்காசி மக்கள் கோரிக்கையான தென்காசியில் முக்கிய இணைப்பு சாலையாக விளங்கும் புளியங்குடி - சங்கரன்கோவில் சாலை மேம்படுத்தப்படும். தென்காசி மாவட்டத்திற்கு புதிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். துரைசாமிபுரம் மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக பனையூர் கூடலூர் துரைசிங்கப்புரம் சாலை மேம்படுத்தப்படும். இலத்தூர் ஏரி 10 கோடி ரூபாய் செலவில் ஒரு முக்கிய மீன்பிடி மற்றும் சுற்றுலா தலமாக மாற்றப்படும். சிவகிரி - ஆலங்குளம் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆலங்குளத்தில் புதிய வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைக்கப்படும். ராம நதி - ஜம்பு நதி திட்ட பணிகளுக்கு கடந்த ஆட்சியில் நிர்வாக அனுமதி பெறப்பட்டது, ஆனால் அதற்கு முறையான அனுமதி பெறப்படாததால் அந்த பணிகள் துவங்கப்படாமல் இருந்தது. அதற்கு முறையான வனத்துறை அனுமதி பெறப்பட்டு ஒன்றிய வனத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அனுமதி பெறப்பட்டதும் பணிகள் நடைபெறும். இத்தகைய நலத்திட்ட சாதனைகளின் அரசு தான் திமுக அரசு” என்று பேசினார்.
மேலும், “தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் எந்த சாதனையும் செய்யவில்லை என எதிர்கட்சி தலைவர் புலம்பி கொண்டிருந்தார். பூனை கண்ணை மூடி கொண்டு உலகமே இருண்டது போல நினைக்குமாம் அது போல எதிர்கட்சி தலைவர் நினைத்து கொண்டு இருக்கிறார். ஆனால் தமிழ் நாட்டு மக்கள் 19 மாதங்களுக்கு முன்பே விழித்து விட்டனர். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அரசியலில் தாங்களும் இருக்கிறோம் என்பதற்காக பழனிசாமி பேசி வருகிறார். ஆனால் எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம், உணர்வு பூர்வமாக உழைக்கிறோம் ” என தெரிவித்தார்.