Director Mari Selvaraj: என் ஊரு, என் மக்கள்.. விமர்சித்த நபர்களுக்கு நெத்தியடி பதில் அளித்த மாரி செல்வராஜ்
வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

ஒட்டுமொத்த தென் தமிழ்நாடும் மழை வெள்ளத்தால் ஸ்தம்பித்தது மட்டும் இல்லாமல், 10 பேர் வெள்ளத்தினால் உயிரிழந்துள்ள சோகம் மட்டும் இல்லாமல் பலர் தங்களது வீடுகளை இழந்து முற்றிலுமாக நிற்கதியாக நிற்பதை ஊடகங்களில் பார்க்க முடிகின்றது. வானிலை ஆய்வு மையம் எதிர்பார்த்ததைவிடவும் மழையின் அளவு அதிகமாக இருந்தது ஒரு காரணம் என்றால், வற்றாத ஜீவநதி எனப்படும் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மூழ்கிப்போன கிராமங்களின் நிலையை நினைக்கும்போது இன்னும் பதைபதைக்க வைக்கின்றது. இந்த வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு, தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல்படை, கடலோர மீட்பு படை தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், தன்னார்வ நிறுவன ஊழியர்கள் மட்டும் இல்லாமல் பொதுமக்களும் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதுமட்டும் இல்லாமல் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை ஆய்வு செய்தது மட்டும் இல்லாமல் மீட்புப் பணிகளில் இறங்கினர். இப்படியான நிலையில், சினிமா மூலம் நன்கு அறியப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜும் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டது மட்டும் இல்லாமல், எங்கெங்கு நிலைமை எப்படி உள்ளது என அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரிவித்து வந்தார்.
குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் களத்திற்கு வந்த பின்னர் அவருடன் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார். மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஆகியோர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டது குறித்து சமூக வலைதளங்களில் மிகவும் மோசமான கருத்துகள் சிலரால் பகிரப்பட்டது. இதற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாவது, “ இது என் ஊரு.. என் மக்கள். அண்ணே.. அம்மாவ காணும், அண்ணே.. எங்க அப்பாவ காணும்.. அண்ணே என்னைய காப்பாத்துங்கணு ஃபோன்பண்ணி மொத்த ஊரும் கதறும்போது என்னால என்ன செய்ய முடியுமோ.. ஓடி வந்து செஞ்சிட்டு இருக்கேன். அதெல்லாம் உணர்ந்தாதான் புரியும். மீண்டும் சென்னை போனாதான் நான் இயக்குநர். அதுவரைக்கும் இந்த ஊருல ஒருத்தன்தான் நான். இந்த மக்கள் என்ன நம்புறதுதான் என்னோட பலம். அதுக்காகவாவது நான் எதாச்சி செய்யணும்.
களத்துல நான் இருந்தேன்.. அமைச்சர் உதயநிதி சாருக்கு நான் கால் பண்ணிக் கூப்பிட்டேன். அவரு என்னோட கதறலக் கேட்டதும் சேலத்துல இருந்து உடனே கிளம்பி வந்துட்டாரு.. எங்களுக்குத் தேவையான உதவிகளும் உடனுக்குடன் கிடச்சது" என கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக அவர் தனது சமூகவலைதளத்தில் தொடர்ந்து மக்களை பாதுக்காப்பாக இருக்கவும் எனவும் தமிழ்நாடு அரசிடம் நிலைமையை எடுத்துக்கூறியும் உதவி கேட்டும் பதிவிட்டிருந்தார். அதில், ”வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்” இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

