Elephant Gandhimathi : நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு தோல் செருப்பு அணிவித்த பக்தர்கள்.. சுவாரஸ்யம் இதுதான்..
வயதில் மட்டுமே முதுமையை கொண்ட காந்திமதி பழகுவதில் குழந்தையாக மிகவும் சாதுவான குணம் கொண்டவள்...
திருநெல்வேலியில் வரலாற்று சிறப்புமிக்க 1500 ஆண்டுகள் பழமையான நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மட்டுமின்றி தமிழகத்தை தாண்டி பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் இக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருபவர்கள் இங்குள்ள கட்டட கலையை ரசித்துவிட்டு செல்வதோடு மட்டுமின்றி கோவிலின் செல்லப்பிள்ளையாக கோவிலுக்குள் அழகு நடைபோடும் காந்திமதி யானையையும் ரசிக்காமல் சென்றதில்லை. தனது 13 வயதில் கோவிலுக்குள் வந்த காந்திமதிக்கு தற்போது 52 வயதாகிறது. வயதில் மட்டுமே முதுமையை கொண்ட காந்திமதி பழகுவதில் குழந்தையாக மிகவும் சாதுவான குணம் கொண்டவள்.
இருப்பினும் வயது முதிர்ச்சியினாலும், அதிக எடையினாலும் கடந்த சில வருடங்களாக சிரமப்பட்டு வந்த காந்திமதி தற்போது தனது எடையை குறைத்து கொண்டதுடன், காலை மாலை நடைபயிற்சி, உணவில் கட்டுப்பாடு என தொடர் பராமரிப்பு காரணமாக எப்போதும் சுறுசுறுப்புடனே வலம் வருவது பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடந்த 3 வருடங்களுக்கு முன்பு 4550 கிலோ எடை கொண்ட காந்திமதி யானை தற்போது தனது எடையை 3950 கிலோவாக குறைத்து உள்ளது.
அதேபோல பக்தர்கள் வழங்கும் அரசி, பழம், வெல்லம், தேங்காய் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்த காந்திமதி தற்போது மருத்துவர் அறிவுரைப்படி நாணல், கோரைப்புல், பசுந்தீவனங்கள் போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளை மட்டுமே உண்டு வருகிறது. காந்திமதியை பாகன் ராமதாஸ் தனது குடும்பத்தில் ஒரு குழந்தையை போல் பார்த்துப்பார்த்து வளர்த்து வருகிறார்.
குறிப்பாக மருத்துவர்களில் அறிவுரைப்படி காலை, மாலையில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது, உரிய நேரத்திற்கு குளியலுக்கு அழைத்து செல்வது, சத்துள்ள உணவுகளை மட்டுமே வழங்குவது என காந்திமதியின் சுறுசுறுப்பிலும் ஆரோக்கியத்திலும் அக்கறையுடன் செயல்பட்டு வளர்த்து வருகிறார்.
இந்த சூழலில் வயது முதிர்வு காரணமாகவும், நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் காந்திமதி யானைக்கு வயது முதிர்வால் நீண்ட நேரம் நிற்கவும் நடக்கவும் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு கால்வலி மற்றும் மூட்டு வலி ஏற்படாமல் இருக்க செருப்பு வாங்கி கொடுக்க பக்தர்கள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் மருத்துவ குணம் கொண்ட 12 ஆயிரம் மதிப்பிலான தோல் செருப்புகளை வாங்கி காந்திமதிக்கு அணிவித்துள்ளனர் பக்தர்கள். செருப்பு அணிந்து நடந்து பழக்கமில்லாத காந்திமதி ஓரிரு நாட்களில் மருத்துவக்குணம் கொண்டு அந்த செருப்புகளை காலில் போட்டு அழகு நடை பயில்வதை பார்க்க ஆவலுடன் பக்தர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் தமிழகத்திலேயே வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோவில் காந்திமதிக்கு முதன்முதலாக செருப்பு அணிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்