கடவுள் இல்லேன்னு சொல்லல; இருந்தா நல்லா இருக்குமுனுதான் சொல்றன் - தொ.பரமசிவனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
பெரியாரின் நினைவு நாளான இன்றே தொ.ப வின் நினைவு நாளும் அனுசரிக்கப்படுகிறது
தொ.ப" என்று அனைவராலும் அழைக்கப்பட்ட தொ. பரமசிவன் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950 ஆம் ஆண்டு பிறந்தவர். ஓட்டுநராக இருந்த தந்தை இளம் வயதிலேயே இறந்து விட, தாயின் அரவணைப்பில் தொ. பரமசிவன் வளர்ந்தார். தொ.பரமசிவனுக்கு மனைவி இசக்கியம்மாள் என்ற மனைவியும், மாசானமணி என்ற மகனும், விஜயலெட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
மதுரை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொருளாதாரம், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலைத் தமிழும் கற்றார், பின்னர் ஆறு ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராக பணியாற்றிய இவர் 1976ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக சேர்ந்தார், முனைவர் பட்ட ஆய்வுக்காக புதுமைப்பித்தன் குறித்து ஆய்வு செய்ய விரும்பினார், ஆனால் இவருடைய ஆய்வு நெறியாளர் மு.சண்முகம்பிள்ளை, கோவில் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் படி கூற மதுரையில் உள்ள "அழகர்கோவிலை" தனது ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டார், இந்த கோவில் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வு, கோவில் குறித்த ஆய்வின் எல்லைகளை விரிவடையச் செய்தது, இவரது ஆய்வுக்கட்டுரையினை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அழகர் கோவில் என புத்தகமாக வெளியிட்டது, தமிழ் மொழியின் மீது பெரும் பற்றும், ஆர்வமும் கொண்டவராக இருந்த இவரது ஆய்வினை செம்மைப்படுத்தும் நோக்கில் சமஸ்கிருதமும் கற்றார், தொடர்ந்து இவர் இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்லூரிகளில் பணியாற்றி 2008 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார்.
இவர் எழுதிய நூல்கள்: "அறியப்படாத தமிழகம்" "பண்பாட்டு அசைவுகள்" "அழகர் கோவில்" "தெய்வம் என்பதோர்" "வழித்தடங்கள்" பரண்" "சமயம்" "சமயங்களின் அரசியல்" "தொ.பரமசிவன் நேர்காணல்கள்" "விடுபூக்கள்" "உரைகல்" "இந்து தேசியம்" "நாள்மலர்கள்" "வாசிப்பு" "பாளையங்கோட்டை ஒரு மூதூரின் வரலாறு" "மஞ்சள் மகிமை" "மரபும் புதுமையும்" "இதுவே சனநாயகம்" "செவ்வி" என பல நூல்களை எழுதியுள்ளார்
'அழகர் கோயில்' நூலுக்குப் பிறகு வெளிவந்த அவரது "அறியப்படாத தமிழகம்" நூல், அவரை தமிழ் பேசும் பகுதிகள் என்றும் அறியப்பட்டவராக்கியது. நாட்டார் தெய்வங்கள், பெருந்தெய்வங்கள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், கலை, சாதி ஆகியவை குறித்து தொ. பரமசிவன் முன்வைத்த பார்வை தற்கால தமிழ் உரையாடல்களில் மிக முக்கியமானதாக அமைந்தது. தமிழர்களின் பண்பாடு எத்தகைய தனித்துவமானது என்பதையும், குறிப்பாக நாட்டார் வழக்காற்றியல் குறித்தும் பல கட்டுரைகளையும், பேட்டிகளையும் வழங்கியுள்ள தொ.பரமசிவன் அவர்கள், திராவிட இயக்கமும் பெரியாரும் இந்த மண்ணில் ஏற்படுத்தியுள்ள அரசியல் - சமூக - பண்பாட்டுத் தாக்கங்களை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தவர். கடந்த ஆண்டு இதே நாளில் (2020 டிசம்பர் 24 ஆம் தேதி) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்கள் பாளையம்கோட்டை அரசு மருத்துவமனையில் காலமானார்.
நடிகரும், அரசியல்வாதியுமான கமல் தசாவதாரம் படத்தில் பேசும் போது ''கடவுள் இல்லைனு சொல்லல. இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்றேன்'' என்ற வாக்கியம் இன்று உயிரிழந்த பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவனுக்கு சொந்தமானதுதான் என்று கமலே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். மேலும் இவரின் அழகர் கோவில் புத்தகத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியதோடு அவரை வீட்டில் இருந்த படியே திரை மூலம் பங்கேற்க செய்தார். இதுவே அவர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியுமாகும்,
மக்களின் மனதில் தொ.ப என்ற பெயரில் நிலைத்து நிற்கும் மனோன்மணியம் பல்கலைக்கழத்தின் முன்னாள் தமிழ் துறைத் தலைவரும், பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான தொ.பரமசிவனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. பெரியாரின் நினைவு நாளான இன்றே தொ.ப வின் நினைவு நாளையும் தமிழ் சமூகம் அனுசரித்து வருகின்றனர்.