கோவை சம்பவத்தை அரசியலாக்க பாஜக முயற்சி செய்கிறது.. கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களை சேர்ந்த பெண்களை கொண்டு சாதனை பூக்கள் என்ற உணவு உற்பத்தி மகளிர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இலங்கை தமிழர்களின் பாரம்பரிய ஓலைப்புட்டு உணவகத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இரண்டு கோடியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.விழாவுக்கு தமிழக அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி வணிக வளாகத்தையும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய உணவான ஓலைப்புட்டு உணவகத்தையும் திறந்து வைத்தார்.
இதில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி எம்பி,இலங்கை தமிழர் உங்களில் வாழும் பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் இந்த உணவகம் துவங்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரக்கூடிய முயற்சியாக இது இருக்க வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது,இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர காண்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுக்க முதல்வர் நிதி ஒதுக்கி உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக 136 வீடுகள் கட்டப்படுகின்றன. இலங்கைத் தமிழர் நலனுக்காக ரூ 300 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார்.தூத்துக்குடியை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இது போன்ற உணவகங்கள் வர வேண்டும் என்றார்.
ஓலைப்புட்டு உணவகம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளையூரணி, தாப்பாத்தி,குளத்துவாய்ப்பட்டி ஆகிய இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் மகளிர் மூலம் நடத்தப்படுகிறது. இதற்காக இம் முகாம்களை சேர்ந்த பெண்களை கொண்டு சாதனை பூக்கள் என்ற உணவு உற்பத்தி மகளிர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி, “திமுக தமிழை அழிப்பதாக கூறி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். யார் யார் தமிழை வளர்க்கிறார்கள்,யார் தமிழை அழிக்க நினைக்கிறார்கள் என்றும் எங்கள் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு சென்று படிக்க முடியாத நிலையை யார் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதும் மக்களுக்கு தெரியும்.
கோவையில் நடந்துள்ள சம்பவம் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அதற்கு முதல்வர் கண்காணிப்பை அதிகப்படுத்தி உள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு நடந்துவிட்டது. அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி இதனை தொடர்ந்து அரசியலாக்க வேண்டும் மக்களுக்கு இடையே காழ்ப்புணர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும் என்று எண்ணத்தில் செயல்படுவது மிகத் தவறானது” என்றார்.