Thiruchendhur : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
முருகன் அரக்கனை அழிக்கிறார். முருகன் இங்கு எழுந்தருள வேண்டும் என வியாழபகவான் வேண்டி கேட்க முருகன் திருச்செந்தூரில் எழுந்தருள்கிறார் என்கிறது புராண வரலாறு
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி சுவாமி கோயிலில் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா' பக்தி கோஷம் விண்ணத்திர மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் 5 வீடுகள் மலைகளில் இருக்க இது மட்டும்தான் கடற்கரையில் அமைந்திருக்கிறது. எனவே இந்த ஸ்தலம் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றிருக்கிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய திருவிழாவான மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு. 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை. அதிகாலை 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம். அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அதிகாலை 3:00 மணிக்கு வெள்ளி பல்லக்கில் யானை மீது அமர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா வந்து கோயிலைச் சேர்ந்தது. அதிகாலை 5:00 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் கும்பலக்கனத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி துவங்கியது. சரியாக அதிகாலை 5:20 மணிக்கு மேளதாளங்கள் பஞ்சவாத்தியங்கள் முழங்க கோமதி சங்கர் சிவச்சாரியார் கொடியேற்றினார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா' என பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கொடி மரத்திற்கு தர்ப்பைப் புல் வைத்து கட்டப்பட்டது. பின்னர் 16 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடி மரம். வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டடு வேதபராயணம். தேவாரம் திருப்புகழ் பாடப்பட்டு மகாதீபராதனை நடந்தது.
இந்நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ மத் திருச்சிற்றம்பலம் தம்பிரான் சுவாமிகள். சப் கோர்ட் நீதிபதி வஷித்குமார். அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன். கோயில் இணை ஆணையர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர். டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன். பாலமுருகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர் மாலை 4:30 மணிக்கு அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலாவும்,தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு ஸ்ரீ பாலவிநாயகர் அஸ்திர தேவருடன் தந்தப்பல்லக்கில் கோயிலிலிருந்து புறப்பட்டு ஒன்பது சந்திகளில் வலம் வந்து கோயிலைச் சேர்வர்.
இத்திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சிவன் கோயிலிருந்து சுவாமி குமரவிடங்க பெருமான். தெய்வானை அம்மன் தனித்தனியே சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5-ம் திருவிழாவான 1-ம் தேதி இரவு 7:30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை. 7-ம் திருவிழாவான 3-ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு உருகு சட்டசேவையும். மாலையில் சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. 8-ம் திருவிழாவான 4- ம் தேதி அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்திகோலத்திலும். பகல் 11:30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாந்தி கோலத்திலும் வீதி உலா நடக்கிறது.
மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10-ம் திருவிழா 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 11-ம் திருவிழாவான 7-ம் தேதி இரவு தெப்ப உற்சவம். 12-ம் திருவிழாவான 8-ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன். இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் செய்து உள்ளனர்.