ஆதிச்சநல்லூரில் மனிதனின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய அகழாய்வு பணிகள் தொடக்கம்
ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் தங்கத்தில் ஆன நெற்றிப் பட்டம் வால் ஈட்டி போன்ற போர் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் தொடங்கியது. அகழாய்வு பணியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். இந்த அகழாய்வு பணியில் 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்க கால வாழ்விடம் பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள் கிடைத்தது. இந்த பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நிறைவு பெற்றது.
இந்த நிலையில் தொடர்ந்து ஆதிச்சநல்லூர் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்கு அனுமதி பெற உள்ளதாகவும் அனுமதி கிடைத்த பின்னர் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்கான அகழாய்வு பணிகள் தொடங்கும் என்று ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்பட்டிருந்தது. கடந்த வருட இறுதியில் ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த ஆதிமனிதனின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய ஐந்து இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் அகரம், கொங்கராயகுறிச்சி, கால்வாய், கருங்குளம், திருக்கோளூர் ஆகிய ஐந்து இடங்களில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் முதல் கட்டமாக ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள திருக்கோளூரில் முதல் கட்டமாக அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளது. தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் இந்த அகழாய்வு பணிகள் நடைபெறும் என்று ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் இதுவரை புதைவிடங்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் வாழ்விடப் பகுதியில் எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த பணிகளை மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் ஏரல் வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பணிகளை தொடங்கி வைத்து பேசிய மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் பேசுகையில், "ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு பணிகள் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த மனிதர்களை முதுமக்கள் தாழிகளில் வைத்து புதைத்த இடுகாடாக ஆதிச்சநல்லூர் உள்ளது.
ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் தங்கத்தில் ஆன நெற்றிப் பட்டம் வால் ஈட்டி போன்ற போர் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. இதைப்போல் ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்கான அடுத்த கட்ட அகழாய்வு பணிகள் திருக்கோளூரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அகழாய்வு பணி ஓர் ஆண்டுகள் நடைபெறும். இதில் திருக்கோளூர், ஆதிச்சநல்லூர், கொங்கராய்குறிச்சி, அகரம், கால்வாய், கருங்குளம் ஆகிய ஆறு இடங்களில் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்கான அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளது” என்றார்