(Source: ECI/ABP News/ABP Majha)
தென்காசி தனியார் குவாரியால் பாழாகும் விவசாய நிலங்கள்: விவசாயிகள் வேதனை!
விவசாய நிலங்களில் எங்கு பார்த்தாலும், பாறைத் துகள்களாக காட்சியளிக்கின்றன. மேலும் பயிரிட்ட செடிகள் மீது பாறை துகள்கள் பரவி செடிகளில் உள்ள இலைகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ளது குறிச்சாம்பட்டி கரையாளனூர் கிராமம். இப்பகுதியில் விவசாயிகளுக்கு அதிகளவில் தோட்டங்கள் உள்ளன. குறிப்பாக அங்கு கிணற்று பாசனங்கள் மூலம் விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாய நிலங்களுக்கு அருகே எம்எம்ஏ எனும் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்படுவதாக அங்குள்ள விவசாயிகள் குற்றாச்சாட்டை முன் வைக்கின்றனர்.
குறிப்பாக விவசாயி ராமையா, திரவியம், வெள்ளைச்சாமி, ராமர், மாடசாமி ஆகியோரின் விவசாய நிலங்களுக்கு அருகே கல் குவாரி இயங்கி வருவதாகவும், குவாரியில் உள்ள கற்களை பெரிய மிஷின்கள் கொண்டு அரவை மேற்கொள்ளும்பொழுது அதில் இருந்து வரும் பாறை துகள்கள் விவசாய நிலங்கள் முழுவதும் பரவுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் விவசாய நிலங்களில் எங்கு பார்த்தாலும், பாறைத் துகள்களாக காட்சியளிக்கின்றன. மேலும் பயிரிட்ட செடிகள் மீது பாறை துகள்கள் பரவி செடிகளில் உள்ள இலைகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனால் செடிகள் வளர்ச்சி அடையாமல் கருகி விடுகின்றன. தினமும் மதிய வேளைகளில் கல் குவாரிகளில் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும்பொழுது, அதிலிருந்து கிளம்பும் வெள்ளை பாறைத் துகள்கள் விவசாய நிலங்களில் நிற்கும் பனை, தென்னை, வாழை மற்றும் அனைத்து மரங்கள் மற்றும் செடிகளிலும் படர்ந்து வருவதால் அவற்றின் வளர்ச்சியையும் தடுத்து வருகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் வேளாண்மைக்கு பயன்படுத்தி வரும் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாமல் வறட்சி நிலைக்கு சென்றுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் அலுவலகம், தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருநெல்வேலி சுங்கத்துறை அலுவலகம் என கடந்த மூன்று ஆண்டுகளாக கரையாளனூர் ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் தனியார் கல்குவாரியை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேரிலும், தபால் மூலமாகவும் புகார் மனுக்கள் அளித்தும் இதுவரையில் எந்த ஒரு அதிகாரிகளும் ஏன் எதற்கு என்று கேள்வி கூட கேட்கவில்லை என்றும் இறுதியாக தமிழக முதல்வரின் சிஎம் செல்லிற்கும் புகார் மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்
கரையாளனூர் பகுதியில் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் உள்ள விவசாய நிலங்கள் இக்கல்குவாரியால் பாதிப்படைந்துள்ளது. விவசாய நிலங்களையும் விவசாயிகளையும் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளை வலியுறுத்தியதோடு, அரசு அதிகாரிகள் இனியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனில் தாங்கள் அனைவரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், கரையாளனூர் ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.