மேலும் அறிய
Advertisement
குமரியில் 28 மீனவர்களை காவு வாங்கிய மீன் பிடி துறைமுகம் - தொடரும் சோகம்
மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி இறந்த மீனவரின் உடலுடன் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி இறந்த மீனவரின் உடலுடன் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் உடனே துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்யக்கோரிக்கை விடுத்தனர்.
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இ்ருந்து தூத்தூர், இனயம் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். துறைமுகம் சரியான கட்டமைப்புடன் கட்டப்படாததால், துறைமுக முக துவாரப்பகுதியில் மணல் திட்டில் படகுகள் சிக்கி கவிழ்ந்து, மீனவர்கள் பலியாகி வருகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 27-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்தனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு பூத்துறை பகுதியை சேர்ந்த சைமன் என்ற மீனவர் முகத்துவாரப்பகுதியில் படகு கவிழ்ந்து பலியானார்.
அதைத்தொடர்ந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தொடங்கினர்.
இந்தநிலையில் கடந்த 29-ந் தேதி காலையில் இனயம்புத்தன்துறையை சேர்ந்த மீனவர் அமல்ராஜ் (வயது 67) என்ஜின் இல்லாத சிறிய பைபர் படகில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றார். அவர் மீன்பிடித்து விட்டு மதியம் துறைமுகத்துக்கு திரும்பி கொண்டு இருந்தார். முகத்துவாரப்பகுதியில் வந்த போது மணல் திட்டில் படகு சிக்கி கவிழ்ந்தது. இதில் அமல்ராஜ் கடலில் விழுந்து அலையில் சிக்கி தத்தளித்தார்.
அப்போது அந்த வழியாக வந்த படகுகளில் இருந்த மீனவர்கள் அவரை காப்பாற்ற கயிறுகளை வீசினார்கள். ஆனால் அமல்ராஜ் கையில் கயிறு பிடிபடவில்லை. இதனால் அவர் அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். அதை பார்த்த சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து சக மீனவர்கள் படகுகளில் சென்று அமல்ராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். மறுநாள் தேடிய போதும் அமல்ராஜ் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக மீனவர் அமல்ராஜை தேடும் பணி நடந்தது. மதியம் 1 மணி அளவில் முத்து குளிக்கும் மீனவர்கள் தேடிய போது அமல்ராஜ் உடல் துறைமுகத்தின் அருகில் இருந்து மீட்கப்பட்டது.
இதற்கிடையே தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை மறு சீரமைப்பு செய்ய வலியுறுத்தி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக ஏலக்கூடத்தில் நேற்று காலையில் இருந்து மீனவர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த 15 கிராம மக்கள் கலந்து கொண்டனர். அமல்ராஜ் உடல் மீட்கப்பட்டதும், உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசாரிடம் கொடுக்காமல், குளிர்சாதனப் பெட்டியில் உடலை வைத்து மீனவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் மீனவப் பிரதிநிதிகள், பங்குப் பணியாளர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மீனவர்கள் கூறும்போது இதுவரை 28 மீனவர்கள் இறந்துள்ளனர். எனவே மேலும் தாமதிக்காமல் உடனே துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
மீனவர்கள் போராட்டத்தையொட்டி குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களின் பிரதிநிதிகளுடன் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலர்மேல்மங்கை, துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் மற்றும் கிள்ளியூர் தாசில்தார் ராஜேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர் ஆகியோர் துறை முகத்துக்கு வர வேண்டும். துறைமுக சீரமைப்பு பணியை தொடங்கி, துறைமுகத்தை மூட வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். அதுபற்றி கலெக்டரிடம் பேசுவதாக உதவி கலெக்டர் அலர்மேல் மங்கை கூறினார். பின்னர் அவர் மீனவ பிரதிநிதிகளிடம், துறைமுகத்தை மூடுவது பற்றியும், நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். அதை மீனவ பிரதிநிதிகள் ஏற்கவில்லை. பின்னர் இறந்த மீனவர் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து இரவு 7.30 மணிக்கு கலைந்து சென்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திருவண்ணாமலை
தமிழ்நாடு
ஆட்டோ
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion