வின்பாஸ்ட் நிறுவன கட்டுமான பணிகளுக்காக சரமாரியாக அள்ளப்படும் சரள் மண் - அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நிலை
வின்பாஸ்ட் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்- கட்டுமான பணிகளுக்காக சரமாரியாக அள்ளப்படும் சரள் மண்- அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நிலை
தூத்துக்குடியில் முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட வின்பாஸ்ட் கார் நிறுவன கட்டுமானப் பணிக்கு அரசின் அனுமதியின்றி சரள் மண் எடுப்பதால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்ற நிறுவனம் 4000 கோடி ரூபாயில் மின்சார கார், பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையை தூத்துக்குடியில் தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, தூத்துக்குடி சில்லாநத்தம் கிராமத்தில் அந்நிறுவனத்துக்கு தேவையான 406 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், வின்பாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஆலைக்கான கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், வின்பாஸ்ட் நிறுவனம் விதிமுறைகளை மீறி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வின்பாஸ்ட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டுமானப் பணிகளுக்காக விதிமுறைகளை மீறி தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் சரள் மண் அள்ளப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பட்டா நிலமாக இருந்தாலும் அதில் மண் எடுக்க கனிமவளத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால், தொழில்நிறுவனம் தொடங்க ஒதுக்கப்பட்ட நிலத்தில், வின்பாஸ்ட் நிறுவனம் விதிமுறையை மீறி சரள் மண் எடுத்து வருவதால் இதுவரை அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரவு, பகல் பாராமல் பத்துக்கும் மேற்பட்ட ஹிட்டாச்சி இயந்திரங்களை கொண்டு நூற்றுக்கணக்கான லாரிகளில் 15 ஏக்கர் பரப்பில் சரள் மண் கொள்ளையை அந்நிறுவனம் நடத்தி வருகிறது. சுமார் 10 அடி வரை தோண்டப்பட்டு மண் அள்ளப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அங்கு ஆய்வு செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை இழப்பீடு செய்த சம்பந்தபட்ட துறையினர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.