தூத்துக்குடியில் மாபெரும் தொழில் புரட்சி! 50,000 வேலைவாய்ப்புகள், விண்வெளி தொழில்நுட்பம் & புதிய முதலீடுகள்!
முதலீட்டு ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இப்பகுதியில் சுமார் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொள்ள தயாராகியுள்ளது. நேற்று நடைபெற்ற TN Rising முதலீட்டாளர் கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ரூ.32,554 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை (MoUs) கையெழுத்திட உள்ளது, இந்த முதலீட்டு ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இப்பகுதியில் சுமார் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இக்கூட்டத்தில் ரூ.2,530 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட உள்ளன. இதனால் 3,600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இந்த புதிய அறிவிப்புகள் தூத்துக்குடியை துறைமுக நகரம் என்ற அடையாளத்தை மாற்றி தொழில்மயமாக்குவதற்கு ஒரு முக்கிய படியாக அமைகிறது. தூத்துக்குடியில் விண்வெளி தொழில்நுட்ப துறையில் புதிய முதலீடுகளை குவிய உள்ளது. Ethereal Exploration Guild என்ற நிறுவனம் ரூ.519 கோடி முதலீடு செய்து உற்பத்தி மற்றும் சோதனை வசதிகளை அமைக்க உள்ளது. இதனால் பல தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அதேபோல், சென்னையைச் சேர்ந்த Agnikul Cosmos ரூ.121 கோடி முதலீடு செய்து ஏவுகணை ஏவுதல் வாகனங்களை உற்பத்தி செய்யவும், சோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதனால் 525 பேர் பணியாற்றுவார்கள். இந்த முதலீடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த Royal Golden Eagle நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.4,953 கோடி முதலீடு செய்து செயற்கை நார்களை உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க உள்ளது, இதனால் 1,100 பேர் பயனடையலாம். மேலும் இத்தொழிற்சாலை இண்டர்நேஷ்னல் பர்னிச்சர் பார்க்-ல் அமைய உள்ளது. இந்நிறுவனம், இந்தோனேசிய தொழிலதிபர் Sukanto Tanotoவால் நடத்தப்படுகிறது, இது உலகளவில் 80,000 பேரை பணியாற்ற வைத்து, 40 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களைக் கொண்டுள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த Hwaseung Enterprises என்ற காலணி நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக, அதவும் திருநெல்வேலியில் முதலீடு செய்ய உள்ளது. இந்நிறுவனம் கங்கைகொண்டான் பகுதியில் சுமார் ரூ.1,720 கோடி முதலீடு செய்து தோல் இல்லாத காலணி உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது, இதனால் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்நிறுவனம் Adidas போன்ற பிரபல பிராண்டுகளுக்கு பெரிய அளவில் ஷூ மற்றும் இதர காலணிகளை தயாரித்து கொடுக்க உள்ளது.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய தென்னிந்திய பகுதிகள் இப்போது எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கிரீன் ஹைட்ரஜன், காலணி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. மேலும், எதிர்காலத்தில் கப்பல் கட்டுமானம் போன்ற தொழில்களும் இங்கு தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதலீடுகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, உள்ளூர் மக்களுக்கு திறமைகளை மேம்படுத்தவும் வாய்ப்பாக இருக்கும்.





















