Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Volkswagen Virtus Taigun: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் விர்டஸ் மற்றும் டைகன் கார் மாடல்களின் இரண்டு ட்ரிம்களின் விற்பனையை நிறுத்தியுள்ளது.

Volkswagen Virtus Taigun: ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் விர்டஸ் மற்றும் டைகன் கார் மாடல்களின், 1.5 லிட்டர் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ட்ரிம்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
கார் மாடல்களை கைவிட்ட ஃபோக்ஸ்வாகன்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், தனது விர்டஸ் மற்றும் டைகன் கார் மாடல்களின் லைன் - அப்பை திருத்தி அமைத்துள்ளது. அதன்படி, இந்த இரண்டு கார்களில் உள்ள பெரிய 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினில். மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக உயர் செயல்திறன் கொண்ட விர்டஸ் மற்றும் டைகன் கார் மாடல்கள், பிரத்யேகமாக ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே உள்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
1.0 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன்
அண்மைக்காலம் வரை குறிப்பிட்ட கார் மாடல்களை 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் தேர்வு செய்யும் வசதி பயனர்களுக்கு இருந்தது. ஆனால், அது தற்போது ப்ராண்டின் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக க்ளட்ச் பெடலை விரும்பும் பயனர்கள் தற்போது 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை நாடவேண்டியுள்ளது. இது 110 PS மற்றும் 175 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது.
இது 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட்டானது மெக்கானிக்கல் அடிப்படையில் எந்த மாற்றத்தையும் பெறாமல், 150 PS மற்றும் 250 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதன் மூலம், ஃபோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடாவின் உள்ளூர் போர்ட்ஃபோலியோவில் அதிக சக்திவாய்ந்த மற்றும் கவனத்தை ஈர்க்கும் இன்ஜின் ஆப்ஷனாக தொடர்கிறது.

விர்டஸ், டைகன் லைன்-அப்பில் திருத்தம் - காரணம் என்ன?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனை ஏற்றுக்கொள்ளும் பக்குவமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதிக உற்பத்தித்திறன் கொண்ட பெட்ரோல் கார்களை வாங்குபவர்கள், செயல்திறனில் சமரசம் செய்யாமல் வசதிக்கு அதிக முன்னுரிமை அளிக்கின்றனர். அந்த வகையில் விர்டஸ் மற்றும் டைகன் கார் மாடல்களின் 1.5 லிட்டர் ஆட்டோமேடிக் எடிஷனின் விற்பனை அதிகரித்துள்ளது. அதேநேரம், மேனுவல் எடிஷனுக்கான தேவை குறைந்து விற்பனையும் சரிந்துள்ள நிலையில், ஃபோக்ஸ்வாகன் இந்த முடிவை எடுத்துள்ளது. இதனிடையே, விர்டஸ் தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நடுத்தர அளவிலான செடான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
திருத்தங்களுக்குப் பிறகு விர்டஸ் கார் மாடலின் விலை (எக்ஸ் - ஷோரூம்) 10 லட்சத்து 49 ஆயிரத்தில் தொடங்கி 19 லட்சம் வரை நீள்கிறது. அதேநேரம், டைகன் கார் மாடலின் விலை 10 லட்சத்து 58 ஆயிரத்தில் தொடங்கி 19 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது.

ஸ்கோடாவிலும் மாற்றமா?
ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்களும் விர்டஸ் மற்றும் டைகன் கார்களுடன் MQB A0 IN ப்ளாட்ஃபார்ம் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்களை பகிர்ந்து கொள்கிறது. எனவே இந்த கார்களிலும் 1.5L டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படும் 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் நீக்கப்படலாம். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே, விரைவில் வெளியாகவுள்ள ஸ்கோடா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகத்தின்போது இந்த அறிவிப்பு வெளியாகலாம். புதிய எடிஷன் ஒப்பனை மாற்றங்கள் மற்றும் உட்புற அப்டேட்களை பெறும். விரைவில் டைகன் மாடலும் அப்டேட்களை பெறலாம்.





















