(Source: Poll of Polls)
நாகர்கோவில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் சிலிண்டர் லீக் - ஊழியர்கள் மயக்கம்
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பணியாளர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் நாகர்கோவில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீரில் கலக்கக்கூடிய குளோரின் சிலிண்டர் லீக் ஆனதால் மூச்சி திணறி 2 ஊழியர்கள் மயக்கம் அடைந்தனர். இந்த சம்பவம்நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு மூக்கடல் அணையில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் முக்கடலில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் குழாய்கள் வழியாக நாகர்கோவில் கொண்டுவரப்பட்டு நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சிக்கு கட்டுப்பாட்டில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு நாகர்கோவில் நகர் முழுவதும் மூன்று லட்சம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இங்கிருந்துதான் கொட்டாரம் கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கும் குடிநீர் செல்கிறது.
இந்த குடிநீர் வழங்கும் நிலையத்தில் திடீரென தண்ணீரை சுத்தம் செய்ய குடிநீரில் கலக்கக்கூடிய குளோரின் சிலிண்டர் லீக்கானதால் பரபரப்பு ஏற்பட்டது. குளோரின் லீக் ஆனதில் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றி கொண்டிருந்த பம்பு ஆப்ரேட்டர்கள் ஆபிராகாம், அருண் ஆகிய இருவரும் மயக்க நிலை அடைந்தனர். தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இந்த லீக்கை சரி செய்ய முயன்றனர். அப்போது தீயணைப்பு துறையைச் சேர்ந்த வரதராஜன் கருப்பசாமி, சுயம்பு சுப்பராமன் ஆகிய மூன்று தீயணைப்பு படை வீரர்களும் மயக்கம் நிலை அடைந்தனர். மொத்தம் ஐந்து பேர் மயக்க நிலை அடைந்து அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் வீடுகளில் உள்ளவர்களும் கலக்கமடைந்துள்ளனர். இந்த விபத்து எப்படி நடைபெற்றது என வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பணியாளர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.