13ம் நூற்றாண்டில் இந்தப் பகுதிதான் நம்பர் 1 பணக்கார நகரமாக விளங்கியது - எது தெரியுமா.?
பட்டினமருதூர் கடற்கரை பகுதிதான் 13-ம் நூற்றாண்டில் நம்பர் 1 பணக்கார நகரமாக விளங்கி உள்ளது. இதனை கீழபட்டினம் என வரலாற்று ஆய்வு தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே கல்மேடு அணை பகுதியில் உள்ள புராதன வரலாற்று சிதைகளை ஆவணப்படுத்த வேண்டுமென தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி மற்றும் குழுவினர் தருவைகுளம் அருகே பட்டினமருதூரை அடுத்த கல்மேடு கிராமத்தில் தொன்மையான ஸ்ரீபெருமாள் கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த கோயில் 17 - 18-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது அங்கிருந்த கல்வெட்டு மற்றும் குறியீடு இருந்தது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து அங்குள்ள கல்லாத்து அய்யன் கோயில் பகுதியில் உள்ள கல்லாறு அணையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதில், அணையின் தெற்கு பகுதியில் காங்கீரிட் சுவர் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில், சுமார் 200 அடி நீளத்துக்கு பழங்கால கற்களாலான சிற்பங்களோடு கூடிய கட்டுமானங்கள் காணப்பட்டன. இவற்றை ஆவணப்படுத்த வேண்டுமென தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ராஜேஷ் செல்வரதி கூறுகையில், “பட்டினமருதூர் கடற்கரை பகுதிதான் 13-ம் நூற்றாண்டில் நம்பர் 1 பணக்கார நகரமாக விளங்கி உள்ளது. இதனை கீழபட்டினம் என வரலாற்று ஆய்வு தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல், கல்லாறு அணைப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ள வரலாற்று சிதைவுகளை முறையாக தொல்லியல் துறை மூலமாக ஆய்வு செய்து, ஆவணப்படுத்த வேண்டும். இப்பகுதியின் வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும். கல்லாறு அணைக்கட்டின் தென் பகுதியில் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டும்போது, முதுமக்கள் தாழிகள் கண்டெடுத்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். எனவே, இப்பகுதியில் வரலாற்று சிதைவுகள் தென்பட்டால் உடனடியாக வருவாய் மற்றும் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட வேண்டும். இங்கு கண்டறியப்பட்டுள்ள வரலாற்று சிதைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஆவணப்படுத்த வேண்டும்,” என்றார்.