கிறிஸ்துமஸ் & புத்தாண்டு ஸ்பெஷல்: மைசூரு-தூத்துக்குடி சிறப்பு ரயில் அறிவிப்பு! பயணிகளுக்கு குட் நியூஸ்!
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து தமிழகத்தின் தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், விரைவில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த சூழலில் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில்வே சார்பில் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான் கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து தமிழகத்தின் தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க மைசூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 23ம் தேதி செவ்வாய்க்கிழமை மற்றும் டிசம்பர் 27 ம் தேதி சனிக்கிழமை ஆகிய தேதிகளில் மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு மைசூர் - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ( 06283) புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.

மறுமார்க்கமாக டிசம்பர் 24 புதன்கிழமை மற்றும் டிசம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் தூத்துக்குடியில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06284) மறுநாள் காலை 7.45 மணிக்கு மைசூரை சென்றடைய உள்ளது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை டிசம்பர் 10 ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
இந்த ரயிலில் மொத்தம் 18 பெட்டிகள் இருக்கும். இரண்டடுக்கு ஏசி பெட்டி ஒன்று, மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் 2, 9 ஸ்லிப்பர் கிளாஸ், 4 பொதுப்பெட்டிகள் மற்றும் 2 செகண்ட் கிளாஸ் கம் லக்கேஜ் பிரேக் வேன் உள்ளிட்டவை இணைக்கப்பட்டு இருக்கும். இந்த ரயில்கள் இருமார்க்கமாக கர்நாடகாவின் மண்டியா, மத்தூர், சென்னப்பட்டணா, ராமநகர், கெங்கேரி, கேஎஸ்ஆர் பெங்களூர் (பெங்களூர் சிட்டி), பெங்களூர் கண்டோன்மென்ட், தமிழகத்தின் ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















