இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தருவைகுளம் 22 மீனவர்களின் நிலை என்ன?- தவிக்கும் குடும்பத்தினர்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேருக்கு ஆக.20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்-தூத்துக்குடி மீனவ கிராமங்களில் சோகம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தருவைகுளம் மீனவர்கள் 22 பேரை மீட்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்தவர் அந்தோணிமகாராஜா(வயது 45). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அந்தோணி மகாராஜா, உமையராஜ் மகன் ரமேஷ்(36), சிப்பிக்குளம் கல்லூரணியை சேர்ந்த சுப்பிரமணியம்(63), பிச்சையா மகன் சோலைமுத்து(41), தருவைகுளத்தை சேர்ந்த ஸ்டீபன்(47), சூசை மரியான் நகரை சேர்ந்த ஜெகதீசன் மகன் அருண்(19), அந்தோணி ஜேசுராஜ் மகன் ஜார்ஜ் ராமு(20), மாதாநகரை சேர்ந்த அந்தோணி அலங்காரராஜ் மகன் அந்தோணி தாதிஸ்(20), ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த இருளாண்டி மகன் இதயகுமார்(30), நரிப்பையூரை சேர்ந்த துரைசாமி மகன் மாரியப்பன்(52), பெரியபட்டினத்தை சேர்ந்த முத்துசாமி மகன் சுரேஷ்(39), பாறைகுளத்தை சேர்ந்த முருகராஜ்(20) ஆகிய 12 மீனவர்களும் கடந்த மாதம் 21-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று உள்ளனர்.
அதே போன்று அந்தோணி தேன் டெனிலா(23) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தருவைகுளத்தை சேர்ந்த சேசு ராஜபாண்டி மகன் மைக்கேல் ஆல்வின்(20), மார்ட்டின் மகன் டேனியல் சஞ்சய், சவரிமுத்து மகன் சில்வர்ஸ்டார்(20), அந்தோணி செல்வராஜ் மகன் மைக்கேல்டேனியல்ராஜா(25), தாளமுத்துநகரை சேர்ந்த கன்னிமுத்து மகன் மரியநாதன்(45), கீழவைப்பாரை சேர்ந்த சூசை மகன் இன்னாசி(47), காடல்குடியை சேர்ந்த ஈசாக் மகன் ரசீன்(45), இருதயம் மகன் விஜயகுமார்(43), கீழஅரசடியை சேர்ந்த அந்தோணி மகன் அழகுராஜா(28), வேம்பாரை சேர்ந்த அந்தோணி சவரிமுத்து மகன் ஆரோக்கிய நார்பட்(19) ஆகிய 10 மீனவர்கள் கடந்த மாதம் 23-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று உள்ளனர்.
இந்த 2 படகுகளில் சென்ற மீனவர்களும் தொடர்ந்து கடல் பகுதியில் மீன்பிடித்து வந்தனர். இவர்கள் பருவலையை பயன்படுத்தி தங்குகடல் மீன்பிடித்து வந்தனர். இவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது, இலங்கை கடற்படையினர் அங்கு ரோந்து வந்து உள்ளனர். அவர்கள் திடீரென 2 மீன்பிடி படகுகளையும் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து அவர்கள் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி 2 படகுகளையும், அந்த படகுகளில் இருந்த 22 மீனவர்களையும் கைது செய்து அழைத்து சென்று உள்ளனர். இது குறித்து தருவைகுளம் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் மீனவர்களை மீட்பதற்காக நடவடிக்கைகளில் மீனவர்களின் உறவினர்கள், சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தருவைகுளம் பங்குதந்தை வின்சென்ட் தலைமையில், ஊர் நிர்வாகிகள் மகாராஜா, ஏ.யோகராஜ், எம்.யோகராஜ், சந்திரபோஸ், தூயமிக்கேல் ஆழ்கடல் செவுள்வலை தொழில் புரிவோர் சங்க தலைவர் பன்னீர்தாஸ், புகழ்செல்வமணி, புனித நீக்குலாசியார் பருவலை விசைப்படகு சங்க தலைவர் சர்ச்சில், காமராஜர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் லாரன்ஸ் மற்றும் மீனவர்கள், உறவினர்கள் ஆட்சியர் லட்சுமிபதியை நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், தருவைகுளம் கிராமத்தில் விசைப்படகில் பருவலை மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். அரசின் ஒத்துழைப்போடு, கடல் மீன்பிடி தொழிலில் யாருக்கும் தீங்கு விளைவிக்காமலும் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். எங்கள் ஊரைச் சேர்ந்த 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 22 மீனர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளதாக தகவல் வந்து உள்ளது. இது குறித்து தாங்கள் தலையிட்டு உங்கள் பருவலை விசைப்படகுகளையும், 22 மீனவர்களையும் விடுவித்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறி உள்ளனர்.
தருவைகுளத்தை சேர்ந்த 22 மீனவர்களையும் கைது செய்து புத்தளம் மாவட்டம் கல்பிட்டி மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் இன்று மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இஓனா விமலரத்ன மீனவர்களை வரும் 20ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து மீனவர்கள் 22 பேர் வாரியபொல சிறையில் அடைக்கப்பட்டனர்.