தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரம் - பாதிக்கப்பட்டோருக்கு முதற்கட்டமாக ரூ 2.5 லட்சம் நிதியுதவி..!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட 12 பேருக்கும் முதல்கட்டமாக ரூ 2.5 லட்சம் நிதியுதவி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாக கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி குமரெட்டியார்புரத்தில் போராட்டம் தொடங்கியது. தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக நூறு தினங்கள் போராட்டம் நடைபெற்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் செய்ய முடிவு செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து 2018 மே 30 ஆம் தேதி தமிழக அரசு மின் இணைப்பை துண்டித்து விடும் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூடியது. கடந்த நான்கு ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவும் ஆலை இயங்காத நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மனு அளித்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது அதனை கட்டுப்படுத்த தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அதிகளவில் காயமடைந்தவர்களுக்கு உடலுறுப்பு பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக இயல்பாக வேலை செய்யமுடியாத அவர்கள் இயல்பு வாழ்வை இழந்தனர். பலரது உதவியை அவர்கள் நாடியுள்ளனர் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை நாடியபொழுது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 12 பேருக்கு அந்நிறுவனம் நிதியுதவி வழங்கியது. இந்த நிதியுதவியை பெற்ற பயனாளிகள் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து கொண்டனர். நிறுவனம் வழங்கிய நிதி தொகை அவர்களின் வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனர். இவ்வாறு ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட 12 பேருக்கும் முதல்கட்டமாக ரூ 2.5 இலட்சம் நிதியுதவி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்