சிதம்பரம் கோயில் தீட்சிதர்களை கைது செய்ய போலீசார் தயக்கம் காட்டுவது ஏன்? - முத்தரசன்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனைவரும் வழிபடுவதற்கு தடையாக இருக்கக் கூடாது என்று அறநிலையத் துறை கூறுகிறது. இதைத் தடுக்கும் தீட்சிதர்களை காவல்துறை கைது செய்ய தயக்கம் காட்டுவது ஏன் என தெரியவில்லை.
தஞ்சாவூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனைவரும் வழிபடுவதற்கு தடையாக இருக்கக் கூடாது என்று அறநிலையத் துறை கூறுகிறது. இதைத் தடுக்கும் தீட்சிதர்களை காவல்துறை கைது செய்ய தயக்கம் காட்டுவது ஏன் என தெரியவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அவர் தஞ்சாவூரில் நிருபர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஏறத்தாழ 200 தீட்சிதர்கள்தான் அராஜகம் செய்கின்றனர். இக்கோயிலில் அனைவரும் வழிபடுவதற்கு தடையாக இருக்கக் கூடாது என்றுதான் அறநிலையத் துறை கூறுகிறது. இதைத் தடுக்கும் தீட்சிதர்களை காவல்துறை கைது செய்ய தயக்கம் காட்டுவது ஏன் என தெரியவில்லை.
தீட்சிதர்கள் அந்த அளவுக்கு அதிகாரம் படைத்தவர்களா என்பது புரியவில்லை. எனவே, பல்வேறு வழக்குகள் உள்ள தீட்சிதர்களை காவல் துறையினர் கைது செய்ய வேண்டும். இக்கோயிலை தீட்சிதர்களின் பிடியிலிருந்து மீட்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் அரசியல் ரீதியாக அணுக வேண்டும். பாஜக கடந்த 9 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது பற்றி பேசி வாக்கு சேகரிக்க வேண்டும். மாறாக, பாஜக கலவரத்தை தூண்டி வெற்றி பெற வேண்டும் என்கிற குறுகிய நோக்கத்துடன் செயல்படுகிறது.
கலவரம் மூலமாக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர பாஜக துடிக்கிறது. மணிப்பூர் மாநில கலவரத்தை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அங்கு அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி எந்தவித முயற்சியும் செய்யவில்லை. எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்தான் முதல்வர். அவர் தான் விரும்புகிற எம்எல்ஏக்களை அமைச்சர்களாக நியமிக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் செந்தில் பாலாஜி விஷயத்தில் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவதற்கு ஆளுநருக்கு யார் அதிகாரம் வழங்கியது.
அமைச்சர்களாக யார் இருப்பது, நீடிப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் முதல்வருக்குத்தான் உள்ளது. அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பான, எதிரான முறையில் செயல்பட்டு, சட்ட நெருக்கடியை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்து வருகிறார். பல்வேறு மதங்கள், ஜாதிகள் கொண்ட இந்தியாவில் பொது சிவில் சட்டம் சாத்தியமில்லாதது. ஆனால் இதை வைத்து கலவரத்தை தூண்ட பிரதமர் முயற்சி செய்கிறார். மேட்டூர் அணையிலிருந்து 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டால்தான் கடைமடை பகுதிக்குச் சென்றடையும். கடைமடை பகுதிக்கு முழுமையாக தண்ணீர் சென்ற பிறகு முறை பாசனம் வைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலர் முத்து. உத்திராபதி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் வீர. மோகன் உடனிருந்தனர்.