இரண்டு கைகள் இல்லாமல் சாதித்த மாணவிக்கு வி.கே.சசிகலா வாழ்த்து; விரைவில் நேரில் சந்திக்கிறார்..!
மயிலாடுதுறையில் இரண்டு கைகளும் இல்லாத நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவி லஷ்மியை, சசிகலா தொலைபேசியில் வாயிலாக அழைத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் கொத்த தெருவில் அமைந்துள்ளது அன்பகம் தனியார் ஆதரவற்றோர் காப்பகம். இந்த காப்பகத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு திருவாரூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்து 16 நாட்கள் ஆன பச்சிளம் பெண் குழந்தையை பராமரிக்க முடியாமல் காப்பகத்தில் விட்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து காப்பகத்தில் உள்ள நிர்வாகிகளும், உதவியாளர்களும் தாய், தந்தையராக மாறி இன்று வரை அந்த குழந்தையை பராமரித்து வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டு கைகளும் இல்லாத நிலையில் மெல்ல மெல்ல கால்களால் சில வேலைகளை செய்ய பழகிக் கொண்டார் லட்சுமி. இதனைத் தொடர்ந்து கால்களால் கரகத்தை தூக்கி ஆடுவது, கால்களால் கோலம் போடுவது, கால்களால் ஓவியங்கள் வரைவது, கால்களால் வாசல் தெளித்து கோலம் போடுவது என்று கைகளால் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் கால்களால் செய்யத் துவங்கினார். அதுமட்டுமின்றி கலை மேல் உள்ள ஆர்வம் காரணமாக இவர் கரகாட்டம் ஆடும் பொழுது இரண்டு கால்களைப் பயன்படுத்தி கரகத்தைத் தலையில் தூக்கி வைப்பது, தாம்பாலத்தட்டின் மீது நின்று கரகம் ஆடுவது, பானையில் மேல் நின்று கரகம் ஆடுவது என்று இரண்டு கைகளால் பேலன்ஸ் செய்து ஆடும் ஆட்டத்தை உடலை சமப்படுத்தி கைகள் இல்லாமலேயே செய்வது பார்ப்பவர்கள் அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
இதன் காரணமாக அன்பகம் சார்பில் நடைபெறும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இவரது கரகாட்டம் கண்டிப்பாக இடம்பெறும். 2017 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற காவிரி புஷ்கரத்தில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அங்கு நடைபெற்ற கலை விழாவில் இவரது கரகாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஊடகங்கள் மூலம் இதனைப் பார்த்த இவரது பெற்றோர், காப்பகத்தில் வந்து மீண்டும் தங்களுடன் வரும்படி அழைத்துள்ளார். தன்னை உதாசீனம் செய்து, தான் பெற்ற பிள்ளை என பாராமல் பிறந்த 16 நாட்களில், தன்னை கைவிட்டு விட்டு சென்றவர்களுடன் மீண்டும் செல்ல முடியாது என்று கூறி காப்பகத்தில் தொடர்ந்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடுமையாக படித்து தற்போது நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இதனை அறிந்த வி.கே.சசிகலா தொலைபேசியில் தொடர்பு கொண்டு காப்பக நிர்வாகி கலாவதி மற்றும் வெற்றி பெற்ற மாணவி லட்சுமி ஆகியோரிடம் உரையாடினார். லட்சுமியிடம் பேசி தனது வாழ்த்துக்களை தெரிவித்த சசிகலா, தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் விரைவில் நேரில் வந்து மாணவியை பார்க்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்