கோடை விடுமுறை.. மீன் பிடிக்கச் சென்ற சிறுமிகள் சேற்றில் சிக்கி பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம்!
குத்தாலம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கந்தமங்கலம் கிராமம் பிள்ளையார்கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சண்முகசுந்தரம், மணிமேகலை தம்பதியினர். சண்முகசுந்தரம் ஆந்திராவில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சன்சிகா ஒன்பது வயது மற்றும் சுஜி 8 வயதும் ஆனா 2 மகள்கள் உள்ளனர்.
இரண்டு மகள்களும் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று சன்சிகா மற்றும் சுஜி ஆகியோர் தனது நண்பர்களுடன் அருகே உள்ள ஆயிகுளத்தில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது சன்சிகாவும், சுஜியும் தவறி குளத்தில் விழுந்துள்ளனர். குளத்தில் குறைவாக தண்ணீர் இருந்தாலும், சேரும் சகதியாகவும் இருந்ததால் சேற்றில் சிக்கி இரண்டு குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த பாலையூர் காவல்துறையினர் உடனடியாக குத்தாலம் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, குழந்தைகளின் உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பாலையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தற்போது தமிழகம் முழுவதும் ஆண்டு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு தேர்வுகள் முடிவுற்று, கோடை விடுமுறை சுமார் ஒரு மாத காலம் விடுபட்டுள்ளது.
இதனால் நகர்ப்புறங்களில் வசிக்கும் பிள்ளைகள் பெரும்பாலும் கோடை விடுமுறையை பயன்படுத்தி கோடைகால பயிற்சி வகுப்புகளாக நடனம், பாட்டு, நீச்சல், சிலம்பம் உள்ளிட்டவற்றில் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் பெரும்பாலான அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள், கோடை விடுமுறையை அவர்கள் ஊருக்குள்ளேயே சுற்றித்திரிந்து கழித்து வருகின்றனர். இவ்வாறான சூழலில் அவர்கள் குளம், குட்டை, ஏரி, கண்மாய் போன்ற நீர் நிலைகளிலும் சென்று மீன்பிடித்து விளையாட்டிலும் ஈடுபடுகின்றனர். பெரியவர்களின் பாதுகாப்பு இன்றி இவ்வாறு செல்லும் மாணவர்கள் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இதுபோன்று உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனைப் போக்க பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், மேலும் அரசும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கோடைகால பயிற்சிகள் அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.