Thanjavur: நலவாரியம் முடிவு செய்த ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் - கட்டுமானத் தொழிலாளர்கள் மனு
மாத ஓய்வூதியம் ரூ. 1000 என்பதை ரூ.2 ஆயிரம் என வாரியம் முடிவு செய்ததை உடன் அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: மாத ஓய்வூதியம் ரூ.ஆயிரம் என்பதை ரூ.2 ஆயிரம் என வாரியம் முடிவு செய்ததை உடன் அமல்படுத்த வேண்டும். மேலும் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். இதில் தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் சிஐடியூ மாவட்ட செயலாளர் ஜெயபால், துணைத்தலைவர்கள் அன்பு, பேர்நீதி ஆழ்வார், கட்டுமான தொழிலளார் சங்க செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
மாத ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் என்பதை ரூ.2 ஆயிரம் என வாரியம் முடிவு செய்ததை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 35 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
18-ம் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் தொழிலாளி இறந்து போனால் அவரது குடும்பத்திற்கு இயற்கை மாணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்க வேண்டும். தீபாவளி போன்ஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பணபயன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு காலதாமதம் கடத்தாமல் விரைந்து பணப்பயன்களை வழங்க வேண்டும்.
திருமண உதவித் தொகையை பெறுவதற்கான முதல் திருமணச் சான்று சுய சான்றாக வழங்குவதை ஏற்றுக் கொள்வதுடன், இந்த சான்றை தொழிற்சங்க நிர்வாகிகள் வழங்கலாம் என்று அடிப்படையில் மாற்றி அமைப்பதுடன் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் பரிசீலனை முடிந்து பணபயன் வழங்க வேண்டும். என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
இதேபோல் மெல்லும் புகையிலை மீதான தடையை ரத்து செய்திட வலியுறுத்தி சிஐடியூ மைதீன் புகையிலை தொழிலாளர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கும்பகோணத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மெல்லும் புகையிலை தயார் செய்து விற்பனை செய்து வரும் நிறுவனம் மைதீன் நிறுவனம் ஆகும். அதில் 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவின் பேரில் புகையிலைக்கு தடை விதிக்கப்பட்டு நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
இதனால் 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாழ வழியில்லாமல் குடும்பத்துடன் தவித்து வருகிறோம். எனவே மெல்லும் புகையிலை மீதான தடையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் புகையிலை மீதான தடையை ரத்து செய்யவில்லை எனில் புகையிலை தொழிலாளர்களான எங்களுக்கு அரசு மாற்று வேலை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

