சரஸ்வதி மகால் நூலகத்துக்கு நிரந்தர இயக்குநர் நியமிப்பது குறித்து பரிந்துரைக்கப்படும்: சட்டமன்ற நூலகக்குழு தலைவர் தகவல்
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதற்காக தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
தஞ்சாவூர்: சரஸ்வதி மகால் நூலத்துக்கு நிரந்தர இயக்குநர் நியமிப்பது குறித்தும் அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று சட்டமன்ற நூலகக் குழுத் தலைவர் எஸ். சுதர்சனம் தெரிவித்தார்.
சோழர்கள் காலத்தில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுாலகம் அரசுடைமையாக்கப்பட்டு 100-வது ஆண்டைத் தாண்டிவிட்டது. உலகிற்கு மிகப்பெரிய கல்வி அறிவுப் பொக்கிஷமாக சரஸ்வதி மகால் நூலகம் திகழ்கிறது என்றால் மிகையில்லை.
மிகவும் பழமை வாய்ந்த தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இலக்கணம், வரலாறு, அரிய வகை மூலிகைகள், மருத்துவம் பற்றிய குறிப்புகள் கொண்ட புத்தகங்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர், இங்குள்ள புத்தகம் மற்றும் ஓலைச்சுவடிகள் மூலம் தங்களுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துச் செல்கின்றனர்.
``இரண்டாம் சரபோஜி மன்னரால் கி.பி.1820-ம் ஆண்டு சரஸ்வதி மஹால் நுாலகம் உருவாக்கப்பட்டது. அப்போதே சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் போன்ற பல்வேறு மொழி நூல்கள் நுாலகத்தில் வைக்கப்பட்டன. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த மராட்டியர்கள், நூலகத்தை மிகச் சிறப்பாக நடத்தியதோடு, நூலகத்தில் இருந்து நூல்கள் பலவற்றையும் மொழிபெயர்ப்பு செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சியில், 1918-ம் ஆண்டு அக்டேபர் 5-ம் தேதி, சரஸ்வதி மஹால் நூலகம் அரசுடைமையாக்கப்பட்டு, பொது நூலகமாக அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம், மாவட்ட மைய நூலகம் உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு சட்டமன்ற நூலகக் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சரசுவதி மகால் நூலகத்தில் நிருபர்களிடம் சட்டமன்றக் குழுத் தலைவர் எஸ். சுதர்சனம் கூறியதாவது:
சரசுவதி மகால் நூலகத்தில் ஆள்கள் பற்றாக்குறை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். கீழடி போன்ற 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு, வரலாற்றை அறிவதற்காக தமிழக அரசு அதிமாக நிதி ஒதுக்கீடு செய்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அந்த வகையில் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதற்காக தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த நூலத்துக்கு நிரந்தர இயக்குநர் நியமிப்பது குறித்தும் அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
தமிழ்நாட்டில் நூலகங்கள் மீது முதல்வரும், விளையாட்டு, இளைஞர் நலத் துறை அமைச்சரும் அதிகமாக கவனம் செலுத்துகின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு நூலகம் உருவாக்கப்பட வேண்டும் என எங்களுடைய இளைஞரணி செயலர் கூறியதன் அடிப்படையில், அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, பல இடங்களில் நூலகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மாணவர்கள், மக்களுக்கு பயன்படும் வகையில் நூலகங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற குழு தலைவர் சுதர்சனம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்குழுவில் சட்டமன்ற உறுப்பினர்கள் க. கணபதி, வே. சம்பத்குமார், கே.எஸ். சரவணகுமார், செ. ஸ்டாலின்குமார், குழு அலுவலர் துணைச் செயலர் இரா. இராஜேந்திரன் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் ஆர். மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.