தஞ்சாவூர் மாநகராட்சியுடன் நீலகிரி ஊராட்சியை இணைக்க பெண்கள் எதிர்ப்பு
தஞ்சாவூர் மாநகராட்சி உடன் நீலகிரி ஊராட்சியை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த 300-க்கும் அதிகமான பெண்கள் திரண்டு வந்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி உடன் நீலகிரி ஊராட்சியை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த 300-க்கும் அதிகமான பெண்கள் திரண்டு வந்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ளது நீலகிரி ஊராட்சி. இப்பகுதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள்தான். இவர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் தான் அதிகளவில் பொருளாதாரத்திற்கு உதவியாக உள்ளது. இந்நிலையில் நீலகிரி ஊராட்சியை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து இப்பகுதியை சேர்ந்த சுமார் 250க்கும் அதிகமான பெண்கள் திரண்டு வந்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி ஊராட்சியில் வசிப்பதில் பெரும்பான்மையானவர்கள் கூலித் தொழிலாளர்கள்தான். எங்களின் வாழ்வாதாரத்திற்கு 100 நாள் வேலை திட்டம்தான் உதவியாக உள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சியுடன் நீலகிரி ஊராட்சியை இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் இல்லாமல் போய்விடும். இதனால் கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தில் பின்னடைவை சந்திக்கும் நிலை உருவாகும்.
மேலும் ஏழைகளுக்காக அரசு வழங்கும் விலையில்லா ஆடுகள், விலையில்லா மாடுகள் போன்ற திட்டங்கள் இப்பகுதியை சேர்ந்தவர்கள் பெற முடியாத நிலை உருவாகி விடும். மேலும் சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர் வரி போன்றவையும் உயர்ந்து விடும். இது தினக்கூலி தொழிலாளர்களான எங்களுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும். இவற்றை கூலித் தொழிலாளர்களான எங்களால் செலுத்த இயலாது.
விலைவாசி உயர்வும் அதிகரித்து விடும். அன்றாடம் கிடைக்கும் கூலி வேலையை பார்த்து அதிலிருந்து வரும் சம்பளத்தில் வாழ்க்கை நடத்தி வரும் நாங்கள், எங்கள் குடும்பமும் பாதிக்கப்படுவோம். எனவே தஞ்சை மாநகராட்சியுடன் நீலகிரி ஊராட்சியை இணைக்க கூடாது. மேலும் 100 நாள் வேலை திட்டத்தையும் நிறுத்தம் செய்யக்கூடாது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுக்கா நாகத்தி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், விடுதலை சிறுத்தை கட்சி தஞ்சை மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
நாங்கள் வசிக்கும் பகுதியில் வெட்டாறு ஓடுகிறது. எங்கள் தெருவில் சுமார் 250 குடும்பங்கள் மற்றும் மாதா கோவில் தெருவில் 60 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த ஆற்றில் 1983ம் ஆண்டு காளியம்மன் கோவில் தெரு, மாதா கோவில் தெரு மக்கள் பயன்பாட்டிற்காக படித்துறை கட்டப்பட்டிருந்தது. பின்னர் 1985 ஆம் ஆண்டு அந்த இரண்டு படித்துறையும் இடிந்து விட்டது. அன்று முதல் இன்று வரை எங்கள் பகுதியில் படித்துறை இல்லை.
எங்கள் பகுதியில் படித்துறை கட்டித் தர வேண்டும் என்று 25க்கும் அதிகமான முறை கலெக்டர் அலுவலகம். பொதுப்பணித்துறை, கோட்டாட்சியர் அலுவலகம் உட்பட அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளோம். இருப்பினும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம் குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கும் மிகுந்த அவதி ஏற்படுகிறது எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து படித்துறையை கட்டித் தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..