விஜய் அதிமுக கூட்டணிக்கு சென்றால் அதுதான் அவரது அரசியலுக்கு தற்கொலை பாதையாக அமையும் - தமிமுன் அன்சாரி
விஜய் அதிமுக கூட்டணிக்கு சென்றால் அதுதான் அவரது அரசியலுக்கு தற்கொலை பாதையாக அமையும் என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

விஜய் அதிமுக கூட்டணிக்கு சென்றால் அதுதான் அவரது அரசியலுக்கு தற்கொலை பாதையாக அமையும் என மயிலாடுதுறையில் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழா
மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி இல்லத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்;
இந்தியா கூட்டணி சுய பரிசோதனை செய்ய வேண்டும்
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்திருக்கிறது. பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியா கூட்டணி சுய பரிசோதனை செய்யக்கூடிய நிலையில்தான் இருக்கிறது. காங்கிரசும், ஆம் ஆத்மியும் இணைந்து தேர்தலில் போட்டியிடாததால் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. டெல்லியில் ஏற்பட்ட தோல்வி இந்தியா கூட்டணியில் தொடரக்கூடாது. வருகின்ற பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணிகள் அனைத்தும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். ஈரோட்டில் எதிரணி வேட்பாளர்கள் 44 பேர் டெபாசிட் இழந்ததற்கு திராவிட மாடல் அரசுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
தவெக தலைவர் குறித்த கருத்து
கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் முழுமையாக களத்திற்கு வரவில்லை. விஜய்யின் அரசியல் நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. நடிகர் விஜய் தலைமையில் கூட்டணி என்று என்று அறிவித்துள்ளார். எந்த கூட்டணி தலைமையையும் அவர் ஏற்கக்கூடாது.
தோற்ற விரக்தியில் சீமான் பேசுகிறார்
கூட்டணி கட்சிகளை அரவணைக்கும் தன்மை திமுகவிடம் உள்ளது. ஈரோடு பணப்பட்டுவாடா நடைபெற்றது என்று சீமான் கூறுவதை ஏற்க முடியாது. அதிமுக போட்டியிடாதபோது அந்த வாக்கு சீமானுக்கு செல்லவில்லை தவளை தன் வாயால் கெட்ட கதையாக உள்ளது. பெரியாரை விமர்சித்ததால் ஈரோடு மக்கள் சீமானை நிராகரித்துள்ளனர். தோற்ற விரக்தியில் பணநாயகம் என்று சீமான் பேசுகிறார். அதிமுகவின் கொள்கைக்கு முரணாக உள்ள பாஜகவுடன் கூட்டணி என்பதை மறைமுகமாக சொல்கிறார். அதிமுக –பாஜக கூட்டணி உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு வாழ்வா சாவா என்ற நிலையில் எந்த கட்சியையும் கூட்டணிக்கு அழைப்பார். அதிமுக அழைப்பை விஜய் ஏற்க வாய்ப்பில்லை. அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அரசியல் தற்கொலை பாதையாகும். விஜய் அதிமுகவிற்கு செல்லமாட்டார். என்று நான் கருதுகிறேன், ஆனால் அரசியலில் எதுவும்’ நடக்கலாம்.
திருப்பரங்குன்றம் தாசில்தாரை இடமாற்றம் செய்ய வேண்டும்
கல்விக் கொள்கையில் மத்திய அரசு தனது பிடிவாதத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்த தமிமுன் அன்சாரி, திருப்பரங்குன்றம் பிரச்சனையில் பிஜேபி, ஆர்எஸ்எஸ் எதிர்பார்த்தது நடைபெறாது. இங்கு இந்து முஸ்லிம் ஒற்றுமையாக உள்ளனர். இரண்டு சமுதாயமும் அவரவர்களுக்கு உள்ள வழிபாட்டு இடத்தில் தங்கள் வழிபாட்டை தொடர வேண்டும் அங்குள்ள மக்கள் எங்கள் பிரச்சனையில் வெளி நபர் தலையிட வேண்டாம் என்று கூறுகின்றனர். திருப்பரங்குன்றம் தாசில்தாரை இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

