சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் மீது அவதூறு வழக்குகள் பலவும் தொடர்ந்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்படுவாரா? என்பதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

பெரியார் குறித்து சீமான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசியது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் தி.மு.க.வினர், திராவிட கழகத்தினர், பெரியார் ஆதரவாளர்கள் என பலரும் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், சீமான் மீது பல புகார்கள் இருப்பதால் சீமான் கைது செய்யப்படுவாரா? என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது,
சீமான் கைதா?
அவதூறு வழக்குகள் பதிவு செய்துவிட்டு நீதிமன்றத்திற்குச் சென்று அங்கு வழக்கைத் தொடர்ந்து கொள்ளலாம். அதற்கு கைதுதான் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. கைதும் செய்யலாம். விட்டாமலும் விட்டுவிடலாம். ஆனால், நீதிமன்றத்தில் அந்த நபர் ஆஜராகி தான் குற்றவாளி இல்லை, தான் அவதூறாக பேசவில்லை என்பதை நிரூபித்தாக வேண்டும்.
அவர் அவதூறாக பேசியுள்ளார் என்றுள்ள சூழலில், அவர் நீதிமன்றத்திற்கு வந்தாக வேண்டும். அதனால், கைது செய்ய வேண்டும் என்பதற்காக அவரை எத்தனை முறை கைது செய்ய முடியும். அனைத்து ஊர்களிலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக அப்படியே உள்ளது.
அந்த புகார்கள் மீது விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் வழக்கு நடத்தப்படும். அனைத்திற்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சு:
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தி.மு.க.விற்கு எதிராக தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார். இந்த சூழலில் திராவிட கோட்பாடுகளின் கொள்கைத் தலைவராக திகழும் பெரியாரையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் காரணமாக சீமானை திராவிட கட்சிகளின் ஆதரவாளர்களும், பெரியார் ஆதரவாளர்களும் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த சூழலில், சமீபத்தில் சீமான் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பு நிலை கடந்த சில வாரங்களாக எழுந்தது. மேலும், சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள சீமானின் வீட்டை பெரியார் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சீமான் திட்டவட்டம்:
மேலும், திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த சீமான் உலகமே பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் தான் பெரியாரை ஏற்கவே மாட்டேன் என்று திட்டவட்டமாக பேசினார். பெரியார் விவகாரத்தில் சீமானின் கருத்துக்குப் பிறகு அவருக்கு திராவிட மற்றும் பெரியார் ஆதரவாளர்களிடம் இருந்து மிகக்கடுமையான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தாண்டு தமிழ்நாட்டில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் சீமானின் பெரியார் குறித்த கருத்து நாம் தமிழர் வாக்கு சதவீதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே அரசியல் நிபுணர்களும் கணித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

