பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! நடுரோட்டில் இறக்கிவிட்டனரா அரசுப் பேருந்து ஓட்டுனர், நடத்துநர்?
வேலூரில் பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணியை அரசுப் பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் பாதி வழியிலே இறக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தோணியூர். இந்த பகுதியில் அமைந்துள்ள மலைகிராமம் ஜனார்த்தான்கொல்லை கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் சேகர். இவரது மனைவி நிர்மலா. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கர்நாடகத்தில் காபி கொட்டை பறிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.
நிறைமாத கர்ப்பிணி:
இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் தரித்த நிர்மலா பிரசவத்திற்காக தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிர்மலாவிற்கு பேருந்தில் வரும்போதே திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
நடுவழியில் இறக்கிவிட்டனரா ஓட்டுநர்? நடத்துனர்?
பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோதே நிர்மலாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போது பேருந்து ஓட்டுனரும், பேருந்து நடத்துனரும் அவர்களை வாணியம்பாடடியில் உள்ள நெக்குந்தி சுங்கச்சாவடியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். மேலும், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஆம்புலன்ஸிலே பிறந்த குழந்தை:
அப்போது, நிர்மலா பிரசவ வலியில் துடிப்பதை அறிந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது, நிர்மலாவிற்கு ஆம்புலன்சிலே பிரசவம் நடந்து அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆம்புலன்சிலே 24 வயதான நிர்மலாவிற்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் கர்ப்பிணிப் பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்டதாக அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மீது சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். அதேசமயம், சிலர் சுங்கச்சாவடியில் எப்போதும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருப்பதன் காரணமாகவே அவர்கள் நிறைமாத கர்ப்பிணியை சமயோஜிதமாக சுங்கச்சாவடியில் இறக்கிவிட்டதாகவும் கூறுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம்புலன்சிலே குழந்தையை பெற்றெடுத்த நிர்மலாவையும், அவரது குழந்தையும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். ஒருவேளை அரசுப்பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் அலட்சியமாக பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணியை நடுவழியில் இறக்கிவிட்டிருந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



















