CSE 2025: ஐஏஎஸ் ஆக வேண்டுமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?
2025ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வு மே 25ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும் நிலையில், பிப்.18 வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Civil Services Examination (CSE) 2025: இந்திய ஆட்சிப் பணிகளில் சேர நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு தேதிகளை அண்மையில் யூபிஎஸ்சி அறிவித்தது. இதற்குத் தேர்வர்கள் விண்ணப்பிக்க பிப்ரவரி 11ஆம் தேதி கடைசித் தேதி ஆக இருந்த நிலையில், அவகாசம் பிப்.18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
979 காலி இடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. மே 25ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
3 கட்டங்களாக நடைபெறும் தேர்வு
நாடு முழுவதும் மத்திய அரசின் ஆட்சிப் பணிகளில் சேர யூபிஎஸ்சி பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. இந்தத் தேர்வில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு முக்கியமானதாகவும் மதிப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்தத் தேர்வு முதல்நிலை, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் எந்தத் தேர்வில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் முதலில் இருந்து எழுத வேண்டும்.
ஆகஸ்ட் மாதம் வெளியான அட்டவணை
முன்னதாக 2024 ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. தேர்வர்கள் https://upsc.gov.in/sites/default/files/RevisedAnnualCalendar-2025-Engl-220824.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, எந்தெந்த தேதிகளில் என்னென்ன தேர்வுகள் என்பதை அறிந்துகொள்ளலாம்.
இந்த நிலையில் 2025ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, மே 25ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஜன.22ஆம் தேதி தொடங்கிய நிலையில், தேர்வர்கள் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பிப்ரவரி 18 வரை விண்ணப்பிக்கலாம்
தேர்வர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. இதன்படி பிப்.18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதேபோல பிப்ரவரி பிப்.19 முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பப் படிவங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
இந்த நிலையில், ஒரு முறை விண்ணப்பப் பதிவில் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே திருத்தம் மேற்கொள்ள முடியும் என்ற மாற்றத்தை யூபிஎஸ்சி கொண்டு வந்துள்ளது.
இதன்படி, ''தேர்வர் தனது OTR சுயவிவரத்தில் (முன்பதிவு) தனது (i) பெயர்/ மாற்றப்பட்ட பெயர், (ii) பிறந்த தேதி, (iii) பாலினம், (iv) தந்தை/ தாய்/ பாதுகாவலர் பெயர், (v) சிறுபான்மை நிலை மற்றும் (vi) 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுப் பட்டியல் எண் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றத்தைச் செய்ய விரும்பினால், OTR தளத்தில் பதிவுசெய்த பிறகு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே அனுமதி
OTR சுயவிவர (பதிவு) தரவில் இந்த மாற்றங்கள் ஆணையத்தின் எந்தவொரு தேர்வுக்கும் அவரது இறுதி விண்ணப்பத்திற்கான விண்ணப்பப் பதிவு முடிந்த அடுத்த நாளில் இருந்து 7 நாட்கள் காலாவதியாகும் வரை செய்யப்படலாம்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வும் வனத்துறை முதல்நிலைத் தேர்வும் மே 25ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

