நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை சட்டம்... மத்திய அரசை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம்
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் திருச்சி காரைக்கால் டெமு ரயிலை விவசாயிகள் மறித்து போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்: நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரவேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்த கிசான் மோர்ச்சா அரசியல் சார்பற்ற விவசாயிகள் அமைப்பு சார்பில் இன்று தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை கொண்டு வர வேண்டும் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். எம் எஸ் பி கேட்டு சாகும் வரை பஞ்சாப் கண்ணுரி பார்டரில் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிருக்கு போராடி வரும் SKM (NP) தலைவர் ஜெக்ஜித் சிங் டல்லேவாலோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் திருச்சி காரைக்கால் டெமு ரயிலை விவசாயிகள் மறித்து போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு தமிழக காவிரிவிவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் மண்டல தலைவர் துரை.பாஸ்கரன், காவிரி இரண்டாவது விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்த திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற டெமு ரயிலை மறித்து விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் சுமார் 50க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 55 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்கிட வேண்டும் புதிய மின்சார சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தக்கூடாது விவசாய விளை பொருள்களை விற்க கிராமங்கள் தோறும் சந்தைகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இந்தியா முழுவதும் விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதேபோல் 11 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி ரயில் நிலையத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.அப்போது போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்.போலீசார்ருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு முன்னதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர். சிலர் போலீசாரின் பிடியில் இருந்து விடுபட்டு ரயிலில் நிலையத்துக்குள் புகுந்து தண்டவாளத்தில் இறங்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.