கிணற்றில் விழுந்த இளைஞரை துரிதமாக காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்
தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த விஜயகுமாரை உயிருடன் மீட்டனர்.

தஞ்சாவூர்: தஞ்சையில் 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த வாலிபரை துரிதமாக செயல்பட்டு உயிருடன் தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
தஞ்சை மானோஜிப்பட்டி பார்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் விஜயகுமார் (33). இவர் இன்று காலை ஈஸ்வரி நகர் லெட்சுமி காலனி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மூடப்படாத கிணற்றின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென 70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விஜயகுமார் தவறி விழுந்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடன் இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தஞ்சை தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த விஜயகுமாரை உயிருடன் மீட்டனர்.
தொடர்ந்து, படுகாயமடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து துரிதமாக செயல்பட்டு வாலிபரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர் வினோத்திற்கு சன்மானம் வழங்கி கவுரவித்தார்.
பணத்தகராறில் 4 பேர் கைது
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 3 பேரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை கீழ வண்டிக்கார தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (64). இவரது மனைவி பாப்பாத்தி (58). இவர்களின் மகன் மதன்குமார். இவர் தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியை சேர்ந்த டி.அலெக்ஸ் (46) என்பவரின் மனைவியிடம் கடனாக பணம் வாங்கியுள்ளார். ஆனால் அந்த பணத்தை இதுவரை மதன் குமார் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அலெக்ஸ், தொல்காப்பியர் சதுக்கம் பகுதியை சேர்ந்த கே.சஞ்ஜய் (24), கே.ஹரி விஷ்ணு (22), முனிசிபல் காலனியை சேர்ந்த ஜே.செல்வகுமார் (24) ஆகியோருடன் கடந்த 14ம் தேதி மதன்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மதன்குமார் இல்லாததால் அவரது பெற்றோர் நாகராஜன், பாப்பாத்தி ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதை பார்த்து பக்கத்து வீட்டை சேர்ந்த எம்.செல்வகுமார் (48) என்பவரும் வந்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அலெக்ஸ் உட்பட 4 பேரும்ட சேர்ந்து நாகராஜன், பாப்பாத்தி, செல்வக்குமார் ஆகியோரை கத்தி மற்றும் கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த 3 பேரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீசில் பாப்பாத்தி புகார் செய்தார். இதன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குபதிவு செய்து நேற்று முன்தினம் அலெக்ஸ், சஞ்ஜய், ஹரி விஷ்ணு, செல்வகுமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





















