தொடர் விடுமுறை நாட்கள்... தஞ்சையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்..!
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களிலும் தொடர் விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறையாக இருந்ததால் தஞ்சைக்கு சுற்றுலாப்பயணிகளின் வரத்து அதிகளவில் இருந்தது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் குடும்பத்துடன் ஏராளமானோர் வருகை தந்தனர்.
தமிழகத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காலாண்டு விடுமுறை விடப்பட்டது. மேலும் ஆயுத பூஜை , விஜயதசமியை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டது. இவ்வாறு தொடர் விடுமுறை காரணமாக தஞ்சையில் உள்ள புகழ் பெற்ற மணிமண்டப பூங்காவில் நேற்று வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குவிந்தனர்.
தஞ்சை நகர் மட்டுமின்றி சுற்றி உள்ள ஏராளமான பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் மணி மண்டப பூங்காவுக்கு வந்தனர். பெரிய கோவிலுக்கு வந்திருந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இங்கு வருகை தந்ததால் திருவிழா போல் மணிமண்டபம் காட்சியளித்தது. ஏராளமானோர் குழந்தைகளுடன் வந்திருந்தனர். அங்கு உள்ள ஊஞ்சலில் குழந்தைகள் உற்சாகமாக ஆடினர். மேலும் பல்வேறு விளையாட்டு சாதன பொருட்களிலும் ஏறி விளையாடினர். உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழர்களின் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன் என பல்வேறு சன்னதிகள் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம், நேற்று என இருதினங்களில் தஞ்சை பெரிய கோவில், அரண்மனை ஆகியவற்றை பார்க்கவும் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்தனர். பெரிய கோவிலில் சுற்றுலா பயணிகள் குவிந்து கட்டிட கலையை பார்த்து ரசித்தனர். பெரிய கோவில் நுழைவு கோபுரம், ராஜராஜன் கோபுரம், மூலவர் கோபுரம், பெரிய நந்தி உள்ளிட்ட பலவற்றை பார்த்து ரசித்தனர். செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் கார், வேன் போன்ற வாகனங்களில் வந்ததால் வாகனம் நிறுத்துமிடமும் நிரம்பி வழிந்தது. கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து கோவிலுக்கு சாலையை கடந்து சென்றபோது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரிய கோவிலுக்கு வழக்கத்தைவிட நேற்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களிலும் தொடர் விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கல்லணை உட்பட பல சுற்றுலாப்பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் இப்பகுதிகளில் கடை வைத்திருந்த தஞ்சை தலையாட்டி பொம்மை, பழங்கள், இளநீர், அன்னாசி, கொய்யா, வேர்கடலை போன்று கடை வைத்திருந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இவர்களிடம் சுற்றுலாப்பயணிகள் நொறுக்குத்தீனிகள் வாங்கிக் கொண்டு தஞ்சையை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.