TN Lake Man: தஞ்சையின் பெருமை.. தமிழ்நாட்டின் ஏரி மனிதன் - யார் இந்த நிமல் ராகவன்? ஊர் போற்றும் சாதனை..!
TN Lake Man: தமிழ்நாட்டின் ஏரி மனிதன் என புகழப்படும் நிமல் ராகவன் எனும் சமூக ஆர்வலரை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

TN Lake Man: தமிழ்நாட்டின் ஏரி மனிதன் என புகழப்படும் நிமல் ராகவன் சாதித்தது என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு:
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இளம் வயதிலேயே பொதுச் சிந்தனையுடன் ஏரிகளைச் சீரமைத்து வரும் நிமல் ராகவனுக்கு பாராட்டுகள்! எடுத்துக்காட்டெனச் செயல்பட்ட இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் அவருக்கு வாழ்த்துகள்! நீர்நிலைகளைத் தூர்வாருதல் – பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது நீர்மேலாண்மையில் முக்கியமானது” என பாராட்டியுள்ளார். இதையடுத்து யார் அந்த நிமல் ராகவன்? என்ற கேள்வி இணையத்தில் வைரலாகியுள்ளது. அதற்கான பதிலை இந்த தொகுப்பில் அறியலாம்.
”தமிழ்நாட்டின் ஏரி மனிதன்”
மூன்றாம் உலகப்போர் என ஒன்று மூண்டால் அது நீருக்கானதாக தான் இருக்கும் என பல்வேறு தரப்பினரும் எச்சரித்து வருகின்றனர். ஆனால், அதன் உண்மைத்தன்மையை உணராமல் சர்வ சாதாரணமாக நீர் வளங்களை சுரண்டி, மனித சமூகம் தவறாக பயன்படுத்தி வருகிறது. ஆனால், நீரின் மகத்துவத்தை உணர்ந்ததால். ஏரிகளை மீட்டெடுத்து தமிழ்நாட்டின் பல குக்கிராமங்களில் நிலத்தடி நீர்வளத்தையும், விவசாயத்திற்கான நீராதாரத்தையும் பெருக்கிக் கொடுத்துள்ள முன்னாள் பொறியாளர், இன்றைய இயற்கை ஆர்வலர் தான் நிமல் ராகவன். இவரால் பலனடைந்த மக்கள் ”தமிழ்நாட்டின் ஏரி மனிதன்” என்றும் அவரை பாராட்டுகின்றனர்.
யார் இந்த நிமல் ராகவன்?
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த நாடியம் கிராமத்தைச் சேர்ந்தவர் நிமல் ராகவன். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், பொறியியல் படித்துவிட்டு துபாயில் வேலை செய்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து மீண்டும் துபாய் செல்லவிருந்த நாளன்று, அவர்கள் பகுதி கஜா புயலால் கடுமையக பாதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதி விவசாயிகளின் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என துபாய் வேலையை தூக்கி எறிந்துள்ளார். களத்தில் இறங்கி மக்களுக்கான பணிகளை செய்ய தொடங்கியவர், இன்று நீர் தேவையும் அதனை உருவாக்கி சிக்கனமாக பயன்படுத்தும் வழிமுறைகளையும் கற்றறிந்து ஏரிகளை புனரமைக்கும் பணிகளில் உலகளவில் பிரபலமானவராக விளங்குகிறார்.
முதல் சம்பவம்:
நீர்நிலைகளை மேம்படுத்தும் தனது முதல் பணியாக பேராவூரணி பெரியகுளத்தை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து அவர் தொடங்கிய பணிக்கு, பெரும்பாலானோர் எதிர்மறையான கருத்துகளையே தெரிவித்துள்ளனர். ஆனால், நம்பிக்கையுடன் போராடி 107 நாட்கள் கடும் முயற்சியால் இலக்கை அடைந்தனர். அதுதான் அவரது நெடுந்தூர பயணத்திற்கான முதல் வெற்றி துவக்கமாக அமைந்தது. அதைதொடர்ந்து, டெல்டாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் பயணம் செய்து ஏரிகளை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டார். தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்னைகளை மக்களே நேரடியாக அவரிடம் கொண்டு சென்று, உதவுமாறு கோரிக்கை வைக்கின்றனர். அதனையும் நிமல் தீர்த்து வைக்கிறார். சமூக வலைதளங்கள் பலரும் அவரது நீர் மேலாண்மை பணிகளுக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் பணிகள்:
அந்த வகையில் 201வது ஏரியாக தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகாவில் உள்ள, 118 ஏக்கர் பரப்பளவிலான குருவிக்கரம்பை பெரிய குளத்தை மறுசீரமைப்பு செய்து முடித்துள்ளார். மேலும் 50-க்கும் அதிகமான ஏரிகளில் தற்போதுநடெர் பணியாற்றி வருகிறார். இதனை தான் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதேபாணியில் குடிநீருக்காக தவித்து வந்த கிராமங்களில், நிமலின் உதவியால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. இதனிடையே, மெகா ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளை மூலம் பணிகளை தொடங்கி, உதவி செய்து வருகிறார். தமிழ்நாடு மட்டுல்லாது இந்தியாவில், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் நீர் புனரமைப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.
வெளிநாடுகளுக்கும் உதவி:
இந்தியா மட்டுமின்றி வறண்ட நிலமாக காட்சியளிக்கும் ஆப்பிரிக்காவிலும் நீர்நிலை புனரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து பிரபல ஆங்கில இணையதளத்திற்கு கடந்த 2023ம் ஆண்டு பேட்டியளித்த நிமல் ராகவன், “கடந்த 2 ஆண்டுகளாக தங்களுக்கு உதவிட வருமாரு, கென்யாவை சேர்ந்த கிரீன் ஆப்பிரிக்கா ஃபவுண்டேஷன் நிறுவனம் அழைத்தது. தற்போது தான் இங்கு வரமுடிந்தது. இங்கு வந்து மூன்று நீர்நிலைகளை புனரமைத்துள்ளோம். அதுமட்டுமல்லாது, 19 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய ஏரி ஒன்றையும் புனரமைக்க உள்ளோம்.” எனத் தெரிவித்தார்.
எங்கெல்லாம் தண்ணீர் இல்லையோ அங்கெல்லாம் நானிருப்பேன் என, மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் நிமல் ராகவன் தஞ்சாவூருக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெருமையாக கருதப்படுகிறார்.





















