தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து; கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் மீட்பு
தீ விபத்து செய்தியை அறிந்ததும், உறவினர்கள் திரண்டதால் மருத்துவமனையில் காவலாளிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு அவசரகால அறுவை சிகிச்சை பிரிவில் இன்று ஏற்பட்ட தீவிபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை நகரின் மைய பகுதியில் பழைய பஸ் ஸ்டாண்ட், பெரியகோவிலுக்கு இடையே 40 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனை வளாகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மருத்துவப்பள்ளியும் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனை தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.
முன்பு இந்த மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நாளடைவில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன மருத்துவ வசதிகள் தொடங்கப்பட்டதால் இங்கிருந்த பிரிவுகள் அங்கு மாற்றப்பட்டன. இதனால் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவு, அவசர கால அறுவை சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப்பகுதி, கண் சிகிச்சை பகுதி, சித்த மருத்துவ பகுதி, காசநோய் பிரிவு போன்றவை செயல்பட்டு வருகின்றன. மேலும் புறநோயாளிகள் பிரிவும் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்திலேயே அதிகளவில் பிரசவம் நடைபெறும் மருத்துவமனைகளுள் இந்த மருத்துவமனையும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவமனைக்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பிரசவத்திற்காக வருவது வழக்கம்.
இதனால் இந்த மருத்துவமனை எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்தே காணப்படும். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் இன்று மதியம் கர்ப்பிணி பெண்கள் அவசரகால அறுவை சிகிச்சை அரங்கம் அமைந்துள்ள கட்டிடத்தில் இருந்து குபுகுபுவென்று புகை வெளியேறியுள்ளது. இதை பார்த்த மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவசரகால அறுவை சிகிச்சை அரங்கத்தின் இரண்டாவது மாடியில் ஒரு அறையில் இருந்த ஏசி புகைந்து தீப்பிடிக்க தொடங்கி உள்ளது. இந்த அறையில் யாரும் இல்லை என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
உடன் மருத்துவமனையில் இருந்த தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைக்க பணியாளர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். தீயை அணைத்தாலும் அந்த கட்டிடத்தை முழுவதுமாக புகை சூழ்ந்து நின்றது. இதனால் நோயாளிகளின் உறவினர்கள் பெரும் பரபரப்பும், அச்சமும் அடைந்து தவித்தனர். உடனடியாக அந்த வார்டில் சிகிச்சை பெற்று வந்த 24 பேர் மற்றும் தரை தளத்தில் இருந்த நோயாளிகள் 30 பேர் என பச்சிளம் குழந்தைகளுடன் மொத்தம் 54 பேர் உடனடியாக அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்திற்கு பத்திரமாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் தகவலறிந்து மருத்துவமனைக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் போக்குவரத்து கணேசன், சிறப்பு நிலைய அலுவலர் பொய்யாமொழி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பாரத் சுப்பிரமணியன், விமலானந்தன், பிரவீன்குமார், பாபு, சத்தியராஜ், மணிமாறன், வினோத் ஆகியோர் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து புகை வெளியேற்றும் கருவியை இயக்கி இரண்டு தளத்திலும் புகையை வெளியேற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீவிபத்து குறித்து அறிந்த நோயாளிகளின் உறவினர்கள் அந்த கட்டிடத்தின் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், எஸ்.பி., ராஜாராம் ஆகியோர் விரைந்து வந்து சம்பவம் நடந்த பகுதியை பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினர். தொடர்ந்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அந்த வார்ட்டில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த தீவிபத்தில் உயிரிழப்போ அல்லது எவ்வித தீக்காயமோ ஏற்படவில்லை.
பின்னர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு இரண்டாம் தளத்தில், ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு ஏசி கீழே விழுந்து உள்ளது. அதில் அங்கிருந்த மெத்தை தீப்பிடித்து எரிந்துள்ளது. முதல் தளத்தில் 24 நபர்கள் இருந்தனர். அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
புகை மட்டுமே பரவி உள்ளது. புகையும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தரை தளம், முதல் தளத்தில் கர்ப்பிணிகள் 54 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள கட்டிடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எந்த உயிர் சேதமும் இல்லை எந்த காயமும் இல்லை. கழிவறை, லிப்ட் என எங்கும் யாரும் சிக்கவில்லை. அனைவரையும் மீட்கப்பட்டு விட்டனர். யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. தீயை அணைக்க முயன்ற மருத்துவமனை பணியாளர்கள் 2 பேருக்கு மட்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்களுக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர். இதனால் நோயாளிகளின் உறவினர்கள், பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

