தொடருது இவர்களின் போராட்டம்... இன்று பேச்சுவார்த்தை நடக்குமா?
தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்றும் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர்: தொடர்ந்து 3ம் நாளாக தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்கு தெரியுங்களா?
அரசாணை எண் 62ன் படி தூய்மை பணியாளர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்றும் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் 420 பேர் கடந்த 20 வருடமாக வேலை பார்த்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு குறைந்த பட்ச சம்பள சட்டப்படி அரசாணை எண் 62 ண்படி ஊதியம் வழங்குவது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 21ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாநகராட்சி முன்பு இன்றும் 3ம் நாளாக சங்க மாவட்ட தலைவர் ஏ.கலியபெருமாள் தலைமையில் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு உள்ளாட்சி பணியாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் தர்ம.கருணாநிதி, ஏஐடியுசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி.சந்திரகுமார், மாவட்ட தலைவர் வெ.சேவையா, அரசு போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மைய மாவட்ட செயலாளர் கோ.ஜெய்சங்கர், முன்னாள் மாநகர செயலாளர்கள் தமிழ்முதல்வன், மார்ட்டின், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் அ.யோகராஜ், நிர்வாகி சுரேஷ், சமூக ஆர்வலர் ஆர்.பழனியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு, அரசால் நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலி 760, ஓட்டுனர்களுக்கு 798, உடன் வழங்க வேண்டும், கடந்த ஓராண்டுக்கு மேலாக தங்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பிஎப்., இஎஸ்ஐ., தொகையை தங்களின் கணக்கில் வரவு வைக்காத, ஒப்பந்தக்காரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாதமும், ஐந்தாம் தேதிக்குள் தங்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். ஆண்டுக்கு இரண்டு செட் யூனிஃபார்ம் வழங்காததையும் மற்றும் எங்களது அத்தியாவசிய கோரிக்கைகளாகிய 12 அம்ச கோரிக்கைகளை, நிறைவேற்ற வேண்டும் என்று மூன்றாவது நாளாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத் துணைத் தலைவர் பி.ஆனந்தராஜ், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கே. முனியம்மாள், கை.இளவரசன், எஸ் .சேகர், எம்.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கைகளை அழைத்துப் பேசி தீர்வு காணவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் துப்புரவுப்பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்று மதியம் தொழிலாளர் நல அலுவலர் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்.





















