இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தரங்கம்பாடி தாலுக்கா மீனவர்கள் 4 பேர் சொந்த ஊர் வந்து சேர்ந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக கூறி பல ஆண்டுகளாக தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைது செய்து, அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைந்துவிடுவதும், விடுதலை காலம் முடிந்து அவர்களை விடுதலை செய்வது, மேலும், எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக கூறி மீனவர்களின் மீது துப்பாக்கி சூடு, மீனவர்களின் வலைகள், அவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன்கள் உள்ளிட்டவைகளை பிடிங்கிக்கொண்டு விரட்டி அடிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இது தொடர்பாக இருநாட்டு அரசு பேசி தமிழக மீனவர்கள் எவ்விதமான இடையூறும் இன்றி மீன்பிடிக்க வேண்டும், அதேபோன்று இதுநாள் வரை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த தங்களின் வாழ்வாதாரமான பல லட்சம் மதிப்புள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். இருந்தும் தொடர்ந்து ஆட்சி மாற்றம் மற்றுமே நடைபெறுவதாகவும், இலங்கை தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இதுநாள் வரை எவ்வித முன்னேற்றமும் எந்த ஒரு அரசும் மேற்கொள்ளவில்லை என இப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் 32 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு தொடர்ச்சியாக மக்கள் போராட்டம் நடத்திவரும் சூழலில் அவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அதில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்த 4 மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தனர்.
Omicron XE Symptoms: 10 மடங்கு அதிவேகம் - ஒமிக்ரான் XE வைரஸின் அசாதாரண அறிகுறிகள் என்னென்ன?
சந்திரபாடியை சேர்ந்த அய்யப்பன், ஆறுமுகசாமி, சின்னங்குடி கிராமத்தை சேர்ந்த கவியரசன் மற்றும் தரங்கம்பாடியை சேர்ந்த நவீன்குமார் ஆகிய 4 மீனவர்களை மீனவளத்துறை ஆய்வாளர் பாலசுப்பரமணியன், மேற்பார்வையாளர் வாசன் ஆகியோர் அந்தந்த கிராம பஞ்சாயத்தார் முன்னிலையில் மீனவர்களை ஒப்படைத்தனர். மேலும் விடுதலை செய்யப்பட்ட தரங்கம்பாடியை சேர்ந்த 33 வயதான பால்மணி என்பவர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதால் தமிழகத்திற்கு அழைத்துவரப்படாமல் இலங்கையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.