அருமலைக்கோட்டையில் வேளாண் பணி அனுபவம் பெறும் திட்டத்தில் செயல்விளக்கம் பெற்ற மாணவ, மாணவிகள்
மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் பெருமைகள், இதனால் கிடைக்கும் நன்மைகள் உட்பட பல்வேறு வேளாண் தகவல்களை இயற்கை விவசாயி தங்கராசு விளக்கி கூறினார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அருமலைக்கோட்டையில் இயற்கை விவசாயி தங்கராசு வயலில் கருப்பு கவுனி நெல் சாகுபடி அறுவடைப்பணிகளை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவம் பெறும் திட்டத்தின் கீழ் நேரடி செயல் விளக்க பயிற்சி பெற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அருமலைக்கோட்டையில் கடந்த 20 ஆண்டுகளாக இயற்கை முறையில் விவசாயம் மேற்கொண்டு வருபவர் தங்கராசு. இவரது வயலில் கருப்பு கவுனி நெல் அறுவடைப்பணிகள் தொடங்கின. இந்நிலையில் ஊரக வேளாண் பணி அனுபவம் பெறும் திட்டத்தின் கீழ் ஈச்சங்கோட்டை டாக்டர்.எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் அர்ஜுன், அஸ்வின் குமார் , ஆஷ்லின், அரவிந்தன், ஆதில், பெனி தேவராஜா , அபிமித்ரன், தரணித், ஆல்வின், அப்பாஸ் அலி (லடாக்) , ஆதர்ஷ் குமார் ( பீகார்), ஆதர்ஷ் குமார் சவுத்ரி (மேற்கு வங்கம்) , ஷ்ரவன் குமார் ( தெலுங்கானா) மாணவர்கள் நேரடியாக வயலுக்கு வந்து செயல்விளக்க பயிற்சி பெற்றனர்.

மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் பெருமைகள், இதனால் கிடைக்கும் நன்மைகள் உட்பட பல்வேறு வேளாண் தகவல்களை இயற்கை விவசாயி தங்கராசு விளக்கி கூறினார். தொடர்ந்து அறுவடைப்பணிகளை மாணவர்கள் பார்வையிட்டு பயிற்சி பெற்றனர். இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் கூறுகையில், இயற்கை சாகுபடி முறையில் கிடைக்கும் லாபம், நன்மைகள் உட்பட பல தகவல்களை அறிந்து கொண்டோம். இது எங்கள் கல்விக்கு மிகுந்த பயன் அளிப்பதாக உள்ளது என்றனர்.
இதேபோல் வேளாண்மை கல்லூரி மாணவிகளும் பங்கேற்று நேரடி செயல்விளக்கம் பயிற்சி பெற்றனர். இயற்கை விவசாயி
தங்கராசு காவிரித்தாய் இயற்கை வேளாண்மை வழியில் சாகுபடிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது சம்பா சாகுபடியில் பாரம்பரிய நெல் வகையான கருப்புக் கவுனி மற்றும் சீரக சம்பா நெற்பயிர்களை பயிரிட்டு இருந்தார்.
இந்த நெல் அறுவடை பணிகள் நடந்தது. இப்பணிகளை ஈச்சங்கோட்டை டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரியை சேர்ந்த நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் லோகேஸ்வரி, மகாலட்சுமி, மகாவித்யா, மகிஷா, மணிச் செல்வி, ஜெனித்தா, மதுமிதா, மேனகா, மௌலிகா, முஸ்கான் தாஜ், முத்துலட்சுமி, நந்தனா, நந்தினி, ஊரக வேளாண் பணி அனுபவம் பெறும் திட்டத்தின் கீழ், நேரடியாக கலந்து கொண்டு புது அனுபவம் பெற்றனர்.
பாரம்பரிய நெல் சாகுபடி, அறுவடை நடைமுறைகள் மற்றும் இயற்கை உரங்கள், உயிரியல் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தும் முறைகள் குறித்த நடைமுறை பற்றி அறிந்து கொண்டனர். விவசாயி தங்கராசு ரத்தசாலி, கருப்புக் கவுனி, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசி வகைகளுடன் கம்பு, ராகி, சோளம், உலர்ந்த கேரட் உள்ளிட்ட பொருட்களை கலந்து, ஊட்டச்சத்து கஞ்சி மாவை தயாரித்து வருகிறார். இதனை அவர் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகள் மற்றும் கடைகள் மூலம் விற்பனை செய்து, பொதுமக்களுக்கு ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை வழங்கி வருகிறார்.
இம்முயற்சி இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதோடு, பாரம்பரிய நெல் வகைகள் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களிடையே விவசாய விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. இதன் பயன்களையும் அவர் செயல் விளக்கம் செய்து காண்பித்தார். இதை நேரடியாக மாணவிகள் கண்டு பயனடைந்தனர்.





















