நவக்கிரக கோயில்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.41 கோடி நிதி
வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி மன அமைதி, மகிழ்ச்சி கிடைப்பதாக ஐதீகம். இதனால் சிவன் கோயில்களில் நவக்கிரக சன்னதி தனித்துவமாக அமைந்திருக்கும், அங்கு சுற்றி வந்து பக்தர்கள் வழிபாடு செய்வார்கள்.

தஞ்சாவூர்: தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் நவக்கிரக கோயில்களில் ரூ.41 கோடியில் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன என அதிகாரிகள் தரப்பில் கூறினர்.
ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களுக்கு பரிகாரம் செய்வதற்காக நவக்கிரக கோவில்களுக்கு செல்வது உண்டு. கிரகங்கள் நல்ல நிலையை எட்டும் போது உடல்நலம் மேம்படும், செல்வமும், செழிப்பும் பெறுகும் என்று நம்பப்படுகிறது. மேலும் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி மன அமைதி, மகிழ்ச்சி கிடைப்பதாக ஐதீகம். இதனால் சிவன் கோயில்களில் நவக்கிரக சன்னதி தனித்துவமாக அமைந்திருக்கும், அங்கு சுற்றி வந்து பக்தர்கள் வழிபாடு செய்வார்கள். ஆனால் நவக்கிரகங்களுக்கு தனித்தனியாகவும் கோயில்கள் உள்ளன.
நவக்கிரக கோயில்கள் 9 ஆகும். இதில் 8 கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. ஒரு கோயில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ளது. இதில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் சூரியனார்கோயில் (சூரியன்) உள்ளது. தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே உள்ள திங்களூரில் சந்திரன் கோயில் (சந்திரன்) உள்ளது. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதர் (ராகு) கோயில், கஞ்சனூரில் அக்னீஸ்வரர் கோயில் (சுக்கிரன்-வெள்ளி) உள்ளது.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குரு- வியாழன்) கோயில் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் (செவ்வாய்) உள்ளது. பூம்புகார் அருகே உள்ள திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் (புதன்) கோயில், கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதர் (கேது) கோயில் உள்ளது. புதுச்சேரி மாவட்டம் காரைக்கால் திருநள்ளாறில் சனிபகவான் கோயிலும் உள்ளது. இந்த கோயில்கள் அனைத்தும் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இந்த கோயில்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் சிரமம் ஏற்படுகிறது. இதையடுத்து நவக்கிரக கோயில்களுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள இந்திய சுற்றுலாத்துறை முடிவு செய்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் நவக்கிரக கோயில்கள் தஞ்சை மாவட்டத்தில் 4 கோயில்களும், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கோயிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 கோயில்களும் உள்ளன. இந்த கோயில்களில் சுற்றுலாப்பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.40 கோடியே 94 லட்சத்து 49 ஆயிரத்து 676 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 4 கோயில்களுக்கு ரூ.15 கோடியும், திருவாரூர், மயிலாடுதுறையில் உள்ள 4 கோயில்களுக்கு ரூ.26 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தங்கும் அறை, கழிவறை வசதி, குடிநீர் வசதி, நடைபாதை அமைத்தல், வாகன நிறுத்துமிடம், விளக்கு வசதி, மழைநீர் வடிகால் வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
இதில் ஒரு சில கோயில்களில் இந்த பணிகள் தொடங்கி உள்ளன. சில இடங்களில் இதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் ஒவ்வொரு கோயில்களுக்கும் குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதிகபட்சமாக பணிகள் தொடங்கி 10 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய இயலும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





















