மாணவர்கள் நலன் கருதி செயல்படும் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.426.61 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்களை உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்: மாணவர்கள் நலன் கருதி சிந்திக்கின்ற, செயல்படுகின்ற முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் மட்டும்தான் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.426.61 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்களை உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று திறந்து வைத்தார். அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதி அம்மாப்பேட்டை ஒன்றியம் ராராமுத்திரைகோட்டை ஊராட்சியில் ரூ.17.40 லட்சம் மதிப்பில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், கீழக்கோவில்பத்து பகுதியில் ரூ.42.65 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகம், அருந்தவபுரம் ஊராட்சியில் ரூ.11 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், கருப்பு முதலியார்கோட்டை பகுதியில் ரூ.16.55 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இதேபோல் உக்கடை ஊராட்சியில் ரூ.14 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், நெடுவாசல் பகுதியில் ரூ.17.40 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ள ரேஷன் கட்டிடம், பள்ளியூர் ஊராட்சியில் ரூ.38 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ள டிபிசி கட்டிடம், தேவராயன் பேட்டை பகுதியில் ரூ.29.60 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடம், கோபுராஜபுரம் பகுதியில் ரூ.29.37 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகம், ராமானுஜபுரம் பகுதியில் ரூ.14.48 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், திருமண்டங்குடியில் ரூ. 29.12 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகம், ஆலவந்தபுரம் ரூ.ரூ.29.37 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகம் உள்ளிட்டவற்றை இன்று காலை அமைச்சர் திறந்து வைத்தார்.
அதேபோல் திருவிடைமருதூர் தொகுதியில் சீனிவாசநல்லூர் பகுதியில் ரூ.15.50 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், வில்லியவரம்பல் பகுதியில் ரூ.13.57 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், கோவிந்தபுரம் பகுதியில் ரூ.12.74 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ள ரேஷன் கட்டிடம், துகீல் பகுதியில் ரூ.23.57 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகம், கீழசுரியமுளை பகுதியில் ரூ.285.35 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும் குலசேகரநல்லூர் பகுதியில் ரூ.30 லட்சத்திற்கு ஊராட்சி அலுவலகம், வெலூர் பகுதியில் ரூ.13.56 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ள ரேஷன் கட்டிடம் என மொத்தமாக ரூ.426.61 லட்சம் மதிப்புள்ள கட்டப்பட்டுள்ள 19 கட்டிடங்களை அமைச்சர் கோவி.செழியன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது: துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் செயல்பாடு என்ன என்பதை இந்தியா உற்று நோக்குகிறது. ஒவ்வொரு மாநில ஆளுநர்களுக்கும் உரிமை என்ன , கடமை என்ன என்பதை அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நெறிமுறைகளில் சொல்லி இருக்கிறது. அதை மீறும் வகையில் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது.
மூன்று உறுப்பினர்கள் தேர்வு குழு என்பதை நான்காக அதிகரிப்பதன் மூலம் அதை செயல்படாமல் தடுப்பது ஆளுநரின் நோக்கமாக உள்ளது. இது நிறைவேறாது. முறைப்படி எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவர்.
மாணவர்களின் நலனில் எதிர்க்கட்சியின் அரசியல் செய்ய வேண்டாம். மாணவர்கள் நலன் கருதி சிந்திக்கின்ற செயல்படுகின்ற முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும்தான். இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், அம்மா பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கலைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.