மயிலாடுதுறை, சீர்காழியில் இனி 24 மணி நேரமும் காவலர் ரோந்து பணி
மயிலாடுதுறை, சீர்காழி நகரங்களை கண்காணிக்க 6 காவல் ரோந்து வாகனங்களை போலீசாருக்கு வழங்கி இ-பீட் சிஸ்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் 2020 -ம் ஆண்டு தமிழகத்தின் 38 -வது மாவட்டமாக உருவாகி செயல்பட்டு வருகிறது. மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு காவல் சரக உட்கோட்டங்கள் உள்ள நிலையில், நிர்வாக வசதிக்காக மயிலாடுதுறை வருவாய் கோட்டமானது மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
காவல்துறையின் அனைத்து துறைகளும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டு செயல்படத் துவங்கியுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய காவல் சரகங்களுக்கு இ-பீட் சிஸ்டத்தை நடைமுறைப்படுத்தி, காவலர்களுக்கு 6 காவல் ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா வழங்கினார்.
தலா 3 வாகனங்கள் மூலம் காவல்துறையினர் மயிலாடுதுறை, சீர்காழி நகரங்களில் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் வகையில் இ-பீட் சிஸ்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குற்றச்சம்பவங்கள் நடந்தால் உடனுக்குடன் சம்பவ இடத்திற்கு சென்றும், காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்குமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா அறிவுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் வேளாண்மை துறை சார்பில் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல்முறை விளக்க பணியை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை அருகே வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், இடுபொருட்கள் வழங்கும் நிகழ்வு துவக்க விழாவில் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் யூரியா தெளிக்கும் பணி செயல்விளக்கத்துடன் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அகரகீரங்குடி கிராமத்தை சேர்ந்த 300 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.
தொடர்ந்து, யூரியா தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நானோ யூரியாவை ட்ரோன் மூலம் வயல்களில் தெளிக்கும் செயல்முறை விளக்க பணியையையும் துவக்கி வைத்தார். ஒரு மூட்டை யூரியாவிற்கு பதில் அரைலிட்டர் திரவ நானோ யூரியாவை பயன்படுத்தி ட்ரோன்கள் மூலம் வயல்வெளிகளில் தெளிப்பதால், விரைவாகவும், சிக்கனமாகவும் பணியை முடிக்கலாம் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் விளக்கினர். இதனை விவசாயிகளிடம் பிரபலப்படுத்தும் முயற்சியாக ட்ரோன் மூலம் யூரியா தெளிக்கும் பணி செயல் விளக்கத்துடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மாணவிகளை கடத்தி ரூபாய் 1 கோடி கேட்டு கொலை மிரட்டல்; 2 பெண்கள் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை