Hyundai Venue: பேய் ஓட்டம் ஓடிட்டு இருக்கு.. இதுல வென்யு புது எடிஷனுமா.. கூடுதல் அம்சங்கள், HX5+ விலை, விவரங்கள்
Hyundai Venue HX5+: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கவனத்தை ஈர்த்துள்ள புதிய தலைமுறை வென்யு காருக்கு, கூடுதலாக HX5+ என்ற வேரியண்டை ஹுண்டாய் அறிமுகப்படுத்தியுள்ளது.

Hyundai Venue HX5+: ஹுண்டாயின் புதிய தலைமுறை வென்யு காரின் HX5+ வேரியண்டின் விலை ரூ.9.99 லட்சமாக இணைக்கப்பட்டுள்ளது.
ஹுண்டாய் வென்யுவின் புதிய வேரியண்ட்:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டின் இறுதியில், ஹுண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது தலைமுறை வென்யு கார் மாடல், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. HX2, HX4, HX5, HX6, HX6T, HX7, HX8 மற்றும் HX10 என 8 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரில், பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காரின் வேரியண்ட்களின் எண்ணிக்கையை மேலும் விரிவுபடுத்தும் விதமாக HX5+ என்ற எடிஷனை ஹுண்டாய் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.9.99 லட்சம் என்ற போட்டித்தன்மை மிக்க விலை மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மூலம், புதிய வேரியண்டானது காம்பேக்ட் எஸ்யுவி ஆன வென்யுவின் லைன் - அப்பை வலுப்படுத்தும் என்று ஹுண்டாய் எதிர்பார்க்கிறது.
ஹுண்டாய் வென்யு HX5+ வேரியண்ட்
ப்ரீமியம் அம்சங்களை கொண்ட எடிஷனை கூட அதிகப்படியான பயனர்கள் எளிதில் அணுகும் விதமாக, நடுத்தர மற்றும் டாப் ரேஞ்ச் வேரியண்ட்களுக்கு மத்தியில் புதிய HX5+ வேரியண்ட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. டிசைன் மற்றும் வெளிப்புற மேம்பாடுகளை பொறுத்தவரை, சாலையில் தனது இருப்பை மேம்படுத்தும் விதமான தோற்ற அப்க்ரேடை HX5+ வேரியண்ட் பெற்றுள்ளது.
வென்யு HX5+ வேரியண்ட் - கூடுதல் அம்சங்கள்
HX5+ வேரியண்டில் இணைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாக ரூஃப் ரெயில்ஸ், குவாட் பீம் எல்இடி முகப்பு விளக்கு,பின்புற வைப்பர் மற்றும் வாஷர் ஆகியவை அடங்கும். அதேநேரம் உட்புறத்தில் வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேபிள் க்ளட்டர் இல்லாமலேயே மொபைலை சார்ஜ் செய்யலாம். புதிய எடிஷனை மேம்படுத்தும் விதமாக, மேம்படுத்தப்பட்ட ஸ்டோரேஜுடன் கூடிய ட்ரைவர் கன்சோல் ஆர்ம்ரெஸ்டும் வழங்கப்பட்டுள்ளது.
பின்புற இருக்கையாளர்களுக்கான பயணத்தை மேம்படுத்தும் விதமாக, கூடுதலாக பின்புற ஜன்னலிலும் சன்ஷேட் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் ஓட்டுனர் பவர் விண்டோவானது பாதுகாப்பு அம்சத்துடன் ஆட்டோமேடிக்காக மேலே மற்றும் கீழே இயங்கும் அம்சத்தை கொண்டுள்ளது. HX5+ வேரியண்டை அறிமுகப்படுத்தியதோடு, ஏற்கனவே உள்ள HX4 வேரியண்டையும் ஹுண்டாய் மேம்படுத்தியுள்ளது. இதில் உள்ள ஓட்டுனர் இருக்கையானது உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியை பெற்றுள்ளது.
விற்பனையில் பேயாட்டம் ஆடும் வென்யு..
ஹுண்டாய் கார் மாடல் அறிமுகமான முதல் மாதத்திலேயே 32 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றது. ஒட்டுமொத்தமாக 2025ம் ஆண்டில் 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வென்யு கார்களை முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தான் இந்த சப்-4 மீட்டர் எஸ்யுவியின் லைன் - அப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக, புதிய வேரியண்டை ஹுண்டாய் அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய எடிஷனுடன் ஒப்பிடுகையில், புதிய வென்யு மாடலில் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என மொத்தமாக பெரிய அளவில் அப்க்ரேட் செய்யப்பட்டுள்ளது. புதிய வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் என, இரண்டு 12.3 இன்ச் கர்வ்ட் பனோரமிக் டிஸ்பிளேக்கள் மற்றும் லெவல் 2 ADAS ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன.




















