Crime: திருமணத்தை மீறிய காதல் ஜோடி தற்கொலை.. இறந்தது தெரியாமல் தூங்கிய குழந்தைகள்..! கன்னியாகுமரியில் நடந்தது என்ன..?
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழியில் உள்ள தேவசகாயம் மவுண்ட்டில் நேற்று காலையில் ஒரு வாலிபரும், ஒரு இளம்பெண்ணும் இறந்து கிடந்தனர்.
நாகர்கோவிலில் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருந்த ஜோடி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மரணம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழியில் உள்ள தேவசகாயம் மவுண்ட்டில் நேற்று காலையில் ஒரு வாலிபரும், ஒரு இளம்பெண்ணும் இறந்து கிடந்தனர். அவர்களின் உடல்களுக்கு அருகில் ஒரு சொகுசு கார் நின்றது. இதுபற்றி தகவலறிந்த ஆரல் வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.
இதன்பிறகு அருகில் இருந்த சொகுசு காரை சென்று பார்த்தபோது அதில் 2 குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்தனர். இதனையடுத்து இறந்த வாலிபரின் உடலை சோதனையிட்ட போது அதில் ஓட்டுனர் உரிமம் இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தியபோது, இறந்து கிடந்தவர் கடியப்பட்டணத்தை சேர்ந்த ஆரோக்கிய சூசைநாதன் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த இளம்பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரது மனைவி ஷாமினி (30) என்பதும் விசாரணையில் வெளிப்பட்டது.
திருமணத்தை மீறிய உறவு:
இதுகுறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது ஆரோக்கிய சூசைநாதன், ஷாமினி இருவரும் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருந்த நிலையில் , அவர்கள் ஆரல்வாய்மொழி வந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்திய ஆரோக்கிய சூசைநாதனுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தூத்துக்குடி மாவட்டம் கொம்புத்துறையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார்.
இதற்கிடையில் தான் ஆரோக்கிய சூசைநாதனுக்கு தன் வீட்டின் அருகில் வசித்த ஷாமினியுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதுபற்றி ஷாமினியின் கணவர் ராஜேஷிடம் பலரும் தெரிவித்த நிலையில், அவர் தன் மனைவி மீது எவ்வித சந்தேகமும் இல்லாமல் நம்பிக்கையோடு இருந்துள்ளார். இதனிடையே தான் ஷாமினி ஆரோக்கிய சூசை நாதனுடன் சேர்ந்து வாழ எண்ணி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன்பின்னரே அனைவரும் ஷாமினி குறித்து சொன்னது உண்மை என ராஜேஷூக்கு தெரிய வந்தது.
பின்னர் சில நாட்கள் கழித்து ஷாமினி மீண்டும் தன் கணவர் ராஜேஷை தேடி வந்துள்ளார். இந்நிலையில் தான், வந்தவர் மீண்டும் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இம்முறை தனது இரு குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், போலீசார் ஷாமினி மற்றும் குழந்தைகளை தேடி வந்தனர்.
தற்கொலை:
இந்நிலையில் வாழைப்பழத்தில் விஷம் வைத்து ஆரோக்கிய சூசை நாதன், ஷாமினி தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன் பல இடங்களுக்கு சென்ற இவர்கள் தங்கள் காதலை யாரும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்களே என நினைத்து தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)