BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
என்னுடைய மனைவி சான்ட்ராவை கார் டாஸ்கில் இருந்து வெளியே பார்வதியும், கம்ருதினும் தள்ளினர். அதைப் பார்த்ததும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சான்ட்ராவுக்கு நடைபெற்ற அநீதிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என அவரது கணவரும், சக போட்டியாளருமான பிரஜின் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது டிக்கெட் டூ ஃபினாலி டாஸ்க் நடைபெற்று வருகிறது. பார்வதி, கம்ரூதின், சான்ட்ரா, சபரி நாதன், அரோரா, சுபிக்ஷா, வினோத், விக்ரம், திவ்யா ஆகிய 9 பேரும் உள்ள நிலையில் கார் டாஸ்க் நடைபெற்றது. இதில் சான்ட்ராவை பார்வதி மற்றும் கம்ரூதின் இணைந்து காரில் இருந்து தள்ளி விட்டனர். இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளது. இதனிடையே சான்ட்ராவுக்கு உடல்நிலை சரியில்லாமல் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இப்படியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவரது கணவரான பிரஜின், “பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது என சொல்லலாம். ஏற்கனவே 3 படங்கள் முடித்து விட்டு சென்றிருந்தேன். இப்போது புது படங்கள் ஒப்பந்தமாகி இருக்கிறேன். விரைவில் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதற்காக தான் நானும் காத்திருக்கிறேன். பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகும் என்னைப் பற்றிய பேச்சு வந்துக் கொண்டே தான் இருக்கிறது. சில பேர் அந்நிகழ்ச்சியில் ஏன் வெளியே சென்றார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை. அதில் நானும் ஒருவன். நான் செய்த நல்ல விஷயங்களால் என் பெயர் இன்னும் உச்சரிக்கப்படுகிறது என நினைக்கிறேன்.
அதேசமயம் மற்ற பிக்பாஸ் சீசனில் 50 நாட்களிலேயே யார் வெற்றிப் பெற போகீறார்கள் என்பதை கண்டுபிடித்து விடலாம். ஆனால் பிக்பாஸ் 9வது சீசனில் யார் ஜெயிப்பார் என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. டிக்கெட் டூ ஃபினாலி டாஸ்கில் அரோரா வெற்றி பெறுவார் என நினைக்கவில்லை. அதனை பார்வதி அல்லது சான்ட்ரா வென்றிருக்க வேண்டும். எனினும் இது ஒரு விளையாட்டு.
என்னுடைய மனைவி சான்ட்ராவை கார் டாஸ்கில் இருந்து வெளியே பார்வதியும், கம்ருதினும் தள்ளினர். அதைப் பார்த்ததும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. இதுதொடர்பான தகவல் வெளிவட்டாரத்தில் இருந்து கிடைத்தது. நான் பிக்பாஸ் ஒப்பந்தத்தில் இருந்ததால் எதுவும் பேச முடியவில்லை. பிக்பாஸ் குழுவை தொடர்புக் கொண்டு கேட்டேன். அவர்கள் இப்போது நன்றாக இருக்கிறார்கள் என கூறியுள்ளார்கள்.
அங்கு நடந்த விஷயங்கள் நடந்திருக்கக்கூடாது. என்ன பேச வேண்டும், பேசக்கூடாது என்பது சுய அறிவு போட்டியாளர்களுக்கு இருக்க வேண்டும். கம்ருதின், பார்வதி தவறு செய்திருந்தால் உரிய தண்டனை இந்த வாரம் கொடுக்கப்படும். மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு நான் செல்லப் போகிறேன். நான் உள்ளே போகும்போது கம்ருதீன் இருந்தார் என்றால் அது அவருக்கு கெட்ட நேரம். இல்லாவிட்டால் நல்ல நேரம். இதை ஒரு வார்னிங்காக கூட இருக்கலாம்” என கூறியுள்ளார்.




















